கோலாலம்பூர், 23 ஜூன் (பெர்னாமா) -- டீசல் கடத்தல் மற்றும் மோசடி நடவடிக்கைகளைத் துடைத்தொழிக்கும் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அரச மலேசிய போலீஸ் படை, பி.டி.ஆர்.எம் நாட்டின் எல்லைப் பகுதிகளில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் 300-க்கும் மேற்பட்ட அதிகாரிகளையும் உறுப்பினர்களையும் பணியமர்த்தியுள்ளது.
எல்லைப் பகுதிகளில் அதிகப்படியான எரிபொருள் கொள்முதலைக் கண்காணிப்பதற்காக, அமலாக்கத்தை வலுப்படுத்தும் குழுவின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக அந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தேசிய போலீஸ் படைத் தலைவர், டான் ஶ்ரீ முஹமட் காலிட் இஸ்மாயில் தெரிவித்தார்.
ஜூலை முதலாம் தேதி முதல் உள்நாட்டு மக்களுக்கு உதவித்தொகை அடிப்படையில், டீசல் ஒரு லிட்டருக்கு 2 ரிங்கிட்10 சென் என்ற விகிதத்தில் புதிய விலையை மாற்றியமைப்பது தொடர்பான அரசாங்கத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து இந்த தொடக்க கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கினார்.
''தற்போதைக்கு, 300-க்கும் மேற்பட்ட அதிகாரிகளையும் உறுப்பினர்களையும் பெட்ரோல் நிலையங்களில் பணியில் அமர்த்தியுள்ளேன். மேலும், வெளிநாடுகளுக்குக் கடத்தும் நோக்கில் டீசல் அதிக அளவில் கொள்முதல் செய்யப்படுவதைத் தடுப்பதை உறுதி செய்வதற்கான ஒரு முதற்கட்ட நடவடிக்கையாக இதைக் கருதுகிறேன்,'' என்று முஹமட் காலிட் விவரித்தார்.
இன்று, கோலாலம்பூரில் நடைபெற்ற மலேசிய ஓய்வுபெற்ற மூத்த போலீஸ் அதிகாரிகள் சங்கம், ரெஸ்பாவின் 42-வது ஆண்டுப் பொதுக் கூட்டத்தை தொடக்கி வைத்த பின்னர் அவர் அவ்வாறு கூறினார்.
இதனிடையே, அண்மையில், சீனாவிற்கு சுற்றுலா சென்றபோது, அந்நாட்டு உள்ளூர் மக்களை இழிவுபடுத்தியதாக சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்ட போலீஸ் உறுப்பினர் ஒருவருக்கு எதிராக ஒழுங்குமுறை விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளதாக முஹமட் காலிட் தெரிவித்தார்.
ஏதேனும் ஒழுங்கு மீறல்கள் இடம்பெற்றால், விதிமுறைகள் மற்றும் சட்டங்களுக்கு இணங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் வலியுறுத்தினார்.
சீருடை அணிந்த ஒவ்வோர் அதிகாரியும் உறுப்பினரும் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் செயல்பாட்டு தர விதிமுறைக்கு உட்பட்டவர்கள் என்றும், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் எப்போதும் நன்னடத்தையைப் பேண வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
''எனக்கு உண்மையில் தகவல் கிடைத்தது. சமீபத்தில் நாங்கள் ஒரு விசாரணையை நடத்தி, சம்பந்தப்பட்ட உறுப்பினர் மீது ஒரு ஒழுங்குமுறை விசாரணை அறிக்கையைத் திறந்துள்ளோம். எனவே, அமைதியாக இருக்குமாறு அனைத்துத் தரப்பினரையும் கேட்டுக்கொள்கிறேன். நான் விசாரணையை என்னால் இயன்றவரை சிறப்பாக நடத்தி, ஒழுங்குமுறை கண்ணோட்டத்தில் மட்டுமல்லாமல், ஏதேனும் சட்ட மீறல்கள் இருந்தால், உரிய நடவடிக்கை எடுப்பேன்,'' என்றார் அவர்.
சீனாவில் பொது இடத்தில், போலீஸ் அதிகாரியுமான அந்த சமூக ஊடகப் பிரபலம், தனது மூக்கை மூடியபடி தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி கூச்சலிட்டதாக கூறபபட்ட இச்சம்பவம் வெளிநாட்டு ஊடகங்களிலும் பரவலாக வெளியிடப்பட்டது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)