Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

எரிசக்தி துறையில் உறவுகளை வலுப்படுத்தும் சாத்தியக்கூறுகளை பிரதமரும் புத்தினும் கலந்துரையாடல்

18/06/2026 03:51 PM

கசான், 18 ஜூன் (பெர்னாமா) --  மலேசியா-ரஷ்யாவிற்கு இடையில் வியூக முக்கியத்துவம் வாய்ந்த எரிசக்தி துறையில் உறவுகளை வலுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் உட்பட இருதரப்பு ஒத்துழைப்பின் பல்வேறு அம்சங்கள் குறித்து பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புத்தினும் கலந்துரையாடினர்.

எரிசக்தி - எண்ணெய் விநியோகத்தில் நீண்டகால ஒத்துழைப்பை வழங்குவதற்கான ரஷ்யாவின் உறுதிப்பாட்டை பாராட்டியதுடன், பொருளாதார ஒத்துழைப்பை விரிவுப்படுத்துவதற்கான முயற்சிகள் குறித்து அவ்விரு தலைவர்களும் பேசியதாக இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டிருந்தது.

புதிய தொழில்நுட்பம், இணையப் பாதுகாப்பு, இலக்கவியல், செயற்கை நுண்ணறிவு, ஏ.ஐ, நவீன விவசாயம் மற்றும் மருந்துவத் தொழில் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் அவர்கள் கலந்துரையாடியதாக, அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதோடு, விசாக்களை ரத்து செய்வதன் மூலம் மக்களின் நடமாட்டத்தை எளிதாக்கும் முயற்சிகள், ரிங்கிட், ரூபிள் ஆகிய உள்ளூர் நாணயங்களைப் பயன்படுத்தி இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டை விரிவுப்படுத்துவதற்கான வழிமுறைகளை ஆராய்வது குறித்தும் அவர்கள் பேசினர்.

மக்களின் நலன் மற்றும் நாட்டின் செழிப்புக்காக எரிசக்தி விநியோகத்தின் நிலைத்தன்மை, தொடர்ச்சி மற்றும் மீள்திறனை உறுதிச் செய்யக்கூடிய அனைத்துலக ஒத்துழைப்பு உட்பட நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்த மடானி அரசாங்கம் வியூக நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்ளும் என்று பிரதமர் அலுவலகம் கூறியது.

இதனிடையே, அடுத்த ஆண்டு மலேசியா -ரஷ்யா இடையிலான தூதரக உறவுகள் நிறுவப்பட்டு அறுபது ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்த இரு நாடுகளும் உறுதியான அடித்தளத்தை அமைத்துள்ளதாக அதிபர் விளாடிமிர் புத்தின் தெரிவித்துள்ளார்.

நேற்று புதன்கிழமை கசானில் நடைபெற்ற ஆசியான்-ரஷ்யா உச்சநிலை மாநாட்டில் ஒரு பகுதியாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் உடனான சந்திப்பின்போது பேசிய புத்தின் கூறினார்.

இருதரப்பு உறவை நேர்மறையான அனுபவம் நிறைந்த வரலாற்றுத் தருணமாக அவர் கருதுகிறார்.

இரு நாடுகளும் தங்களது அமைச்சுகள், நிறுவனங்கள் மற்றும் நாடாளுமன்றங்கள் மூலம் உறவுகளைத் தொடர்ந்து வலுப்படுத்தி வருகின்றன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)