புக்கிட் கியாரா, 15 ஜூன் (பெர்னாமா) -- சமூகத்தைப் பிளவுபடுத்துவதற்காக, திட்டமிட்டே இன உணர்வுகளைத் தூண்டிவிடும் எந்தவொரு அரசியல் விவாதங்களையும் அல்லது தேர்தல் பிரச்சாரங்களையும் நிராகரிக்குமாறு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
மலாய், சீனர், இந்தியர் மற்றும் பூர்வகுடி மக்கள் என எந்தவொரு பின்னணியையும் பாராமல் மடானி அரசாங்கத்தின் நிர்வாகம் அனைத்து மக்களையும் உள்ளடக்கியது என்பதை அவர் வலியுறுத்தினார்.
''இது மலாய் கட்சி, அது சீனக் கட்சி என்றெல்லாம் மோதல்களை உருவாக்கும் பிரச்சாரங்களை தயவுசெய்து கேட்க வேண்டாம் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். இதனால் இறுதியில் பாதிக்கப்படுவது அடித்தட்டு மக்கள்தான். நாம் ஒவ்வொருவரும் இனப் பிரச்சினைகளைப் பேசிக்கொண்டு சண்டையிட்டுக் கொண்டிருந்தால், இந்த வீட்டு வசதி போன்ற பிரச்சினைகளுக்காக யார் போராடுவார்கள்?'', என்றார் அவர்.
திங்கட்கிழமை கோலாலம்பூரில் நடைபெற்ற புக்கிட் கியாரா குடியிருப்பாளர்களுக்கான நிரந்தர வீட்டுவசதித் திட்டத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் அன்வார் உரையாற்றினார்.
நாட்டின் நிர்வாகம் என்பது மற்ற தரப்பினருக்கு இழப்பை ஏற்படுத்தும் ஒரு விளையாட்டு அல்ல என்றும் அவர் விவரித்தார்.
இந்நாட்டில் ஒவ்வொரு இனத்தின் உரிமைகள் நியாயமான முறையில் பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஆகவே கல்வித் தரம் மற்றும் வாழ்க்கைத் தரம் ஆகியவை எப்போதும் உறுதி செய்யப்படுவதில் மக்கள் தங்கள் கவனத்தைச் செலுத்த வேண்டும் என்று நிதி அமைச்சருமான அன்வார் வலியுறுத்தினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)