கோலாலம்பூர், ஜூன் 10 (பெர்னாமா) -- CHOLESTEROL என்பது உடலுக்கு தேவையான ஒரு கொழுப்பு வகை என்றாலும், அதன் தன்மை இரத்தத்தில் அதிகரிக்கும்போது, அது இரத்த நாளங்களில் படிந்து அவற்றைக் குறுகச் செய்யும்.
இதனால் உடலின் இயல்பான இரத்த ஓட்டம் படிப்படியாக குறைந்து, பின்னர் இதய நோய்கள், இரத்த நாள அடைப்பு, பக்கவாதம் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி ‘சத்தமில்லா உயிர்கொல்லி’யாகவும் இந்த இரத்தத்தில் கொழுப்பு உருவெடுக்கிறது.
இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் 40 வயதிற்கு மேற்பட்டவர்களுடன் இளம் வயதினரும் இதய நோய்களின் அபாயத்தை அதிகளவில் எதிர்கொண்டு வருவதாகக் கூறுகிறார் பொதுநல மருத்துவர் டாக்டர் விக்னேசன் துரைசாமி.
நீரிழிவு, ஈழை நோய் போன்று இரத்ததில் படியும் கொழுப்புத் தன்மையும் Family Hypercholesterolemia எனப்படும் பரம்பரை நோயாக வகைப்படுத்தப்பட்டாலும், மாறிவரும் உணவுப் பழக்கவழக்கங்களும் உடற்பயிற்சியற்ற வாழ்க்கை முறையுமே தற்போது அந்நோய் அதிகரிப்பிற்கு காரணமாக இருப்பதாக டாக்டர் விக்னேசன் தெரிவித்தார்.
"இதில் கவலை அளிக்கும் விஷயம் என்றாலும், முறையான மருத்துவப் பரிசோதனை இல்லாததால் பலருக்கு தங்களுக்கு இரத்தத்தில் கொழுப்பு அடைத்து இருப்பதே அறியாமல் உள்ளனர். அதிக எண்ணெய் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகள், துரித மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை முறை, உடல் கொழுப்பு, புகைப்பிடிப்பது, நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகியவை
இரத்தத்தில் அதிகமாக கொழுப்பு சேர்வதற்கு காரணங்களாகும்," என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், உடலில் அதிகரிக்கும் கூடுதல் கொழுப்புத் தன்மையால் ஏற்படும் உபாதைகள் குறித்தும் அவர் விவரித்தார்.
"திடீரென்று ஒரு நாள் மாரடைப்பு, பக்கவாதம், கால்களில் இரத்த ஓட்டக் குறைபாடு, இதயநோய், சிறுநீரக பாதிப்பு ஏற்படலாம். இந்நோய் வரும் வரை காத்திராமல் அதை உடனுக்குடன் தடுக்கும் வழிமுறைகளை நாம் அவ்வப்போது மேற்கொள்ள வேண்டும்," என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இவ்வகை பிரச்சனைகள் ஏற்படாமல் தவிர்ப்பதற்கான சில தீர்வுகளையும் டாக்டர் விக்னேசன் பகிர்ந்து கொண்டார்.
"முப்பது வயதைக் கடந்துவிட்டால் உடனே மருத்துவப் பரிசோதனையின் மூலம் இரத்தத்தில் படிந்துள்ள கொழுப்பின் அளவை பரிசோதித்து கொள்ளுங்கள். ஆரோக்கியமான உணவுமுறைகளைப் பின்பற்ற வேண்டும். வாரத்திற்கு குறைந்த 150 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்துவதற்கு நேரத்தை செலவிட வேண்டும். உடல் எடையை கட்டுக்குள் வைத்திருப்பதோடு புகைப்பிடிப்பதையும் முற்றாக நிறுத்த வேண்டும்," என்றார் அவர்.
உடலில் அதிகக் கொழுப்புத் தன்மை இருப்பது கட்டுப்படுத்த முடியாத ஒரு நோய் அல்ல.
மாறாக, சரியான வாழ்க்கை முறை மாற்றங்களையும் தேவையான மருந்துகளையும் முறையாக எடுத்து கொண்டால் இதை முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரலாம்.
அதை விடுத்து எவ்வித மருத்துவ பரிசோதனையும் செய்யாமல் அலட்சியமாக இருந்தால், அது உயிருக்கே ஆபத்தாகிவிடும் என்று பெர்னாமா செய்திகள் தொடர்பு கொண்ட போது டாக்டர் விக்னேசன் எச்சரித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)