கோலாலம்பூர், ஜூன் 10 (பெர்னாமா) -- இன்று தொடங்கி ஒரு மாதத்திற்குள் 43 நகைகள் காணாமல் போனது தொடர்பில் லெபனானைச் சேர்ந்த Global Royalty Trading SAL எனப்படும் நகை நிறுவனத்திற்கு ஆறு கோடியே 75 லட்சம் ரிங்கிட் செலுத்தும்படி, டத்தின் ஶ்ரீ ரொஸ்மா மன்சோருக்கு கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
ரொஸ்மாவுக்கு எதிராக Global Royalty தாக்கல் செய்த வழக்கை அனுமதித்து நீதிபதி டத்தோ குவாய் சியூவ் சூன் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
Zoom செயலி வழியாக இவ்வழக்கிற்கான தீர்ப்பை வழங்கிய டத்தோ குவாய் சியூவ் சூன், உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தேதியில் இருந்து முழு பணத்தையும் செலுத்தி முடிக்கும் வரை ஆண்டுக்கு ஐந்து விழுக்காடு வட்டி செலுத்த வேண்டும் என்று ரொஸ்மாவுக்கு உத்தரவிட்டார்.
மூன்றாம் தரப்பினரிடமிருந்து இழப்பீடு கோரும் ரொஸ்மாவின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது,
மேலும் Global Royalty மற்றும் மூன்றாம் தரப்பினருக்கு, அதாவது தேசிய போலீஸ் படைத் தலைவர் மற்றும் மலேசிய அரசாங்கத்திற்கு தலா 75 ஆயிரம் ரிங்கிட் தொகையை செலுத்தவும் முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் ரசாக்கின் மனைவியான ரொஸ்மாவுக்கு உத்தரவிடப்பட்டது.
Global Royalty SAL நிறுவனம் மூலம் தம்மிடம் வழங்கப்பட்ட வைர மாலை, காதணி, மோதிரம், காப்புகள் மற்றும் கிரீடங்கள் உள்ளிட்ட 44 நகைகளை, 2001-ஆம் ஆண்டு கள்ளப் பண பரிமாற்றம், பயங்கரவாதம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளின் மூலம் பணம் பெறும் சட்டத்தின் கீழ் மலேசிய அமலாக்கத் தரப்பினர் பறிமுதல் செய்ததாக பொய் கூறியதால் 2023ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி அந்நிறுவனம் ரொஸ்மா மீது வழக்குத் தொடர்ந்தது.
இருப்பினும், 44 நகைகளில் ஒன்றை மட்டுமே போலீஸ் வைத்திருப்பதாகவும் எஞ்சிய 43 நகைகள் அதிகாரிகளின் பாதுகாப்பில் இல்லை என்று அந்நிறுவனம் தெரிவித்திருந்தது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)