Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

கே.டி.எம்.பி-இன் மின்கம்பிகள் திருடிய ஆடவருக்கு மூன்று மாதங்கள் சிறை

09/06/2026 05:05 PM

கிள்ளான், 09 ஜூன் (பெர்னாமா) --  மூன்று நாள்களுக்கு முன்னர், KERETAPI TANAH MELAYU நிறுவனம் கே.டி.எம்.பி-க்குச் சொந்தமான மின்கம்பிகள் திருடிய குற்றத்தை ஒப்புக் கொண்ட ஆடவருக்கு மூன்று மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து, கிள்ளான் மாஜிஸ்திரேட் நீதிமன்றம், இன்று தீர்ப்பளித்தது.

குற்றஞ்சாட்டப்பட்ட ரெய்லி நாசல் என்ற ஆடவர் கைது செய்யப்பட்ட நாளிலிருந்து சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று மாஜிஸ்திரேட் நோர் அஸிலா மாட் உத்தரவிட்டார்.

கே.டி.எம்.பி நிறுவனத்திற்குச் சொந்தமான 850 ரிங்கிட் மதிப்புள்ள 16 மில்லிமீட்டர் அளவிலான 40 மீட்டர் மின்கம்பி மற்றும் 2.5 மில்லிமீட்டர் அளவிலான 20 மீட்டர் மின்கம்பியைத் திருடியதாக, அந்த உள்ளூர் ஆடவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

ஜூன் 6-ஆம் தேதி, கிள்ளான் ஜாலான் தெலுக் பூலாய், ஜாலான் செம்பிலாங் 8E அருகிலுள்ள கே.டி.எம் ரயில் தண்டவாளத்தில் அவர் அக்குற்றத்தைப் புரிந்துள்ளார்.

ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகைச் செய்யும் குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 379-இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகின்றது.

குறிப்பிட்ட பாதையில் இடையூறு ஏற்படுவதாக தகவல் பெற்றதைத் தொடர்ந்து, தெற்கு கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுத் துறையின் D4 சிறப்பு படையின் உதவியுடன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த
கே.டி.எம்.பி-இன் உதவி போலீசாரால் ரெய்லி நாசல் கைது செய்யப்பட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)