புத்ராஜெயா, 08 ஜூன் (பெர்னாமா) -- இந்நாட்டில் சமூக பயண அட்டையைத் தவறாகப் பயன்படுத்தும் வெளிநாட்டினர் மேற்கொள்ளும் சட்டவிரோத வணிக நடவடிக்கைகளைத் தடுக்கும் பொருட்டு, தனது அமைச்சின் கீழ் செயல்படும் நிறுவனங்களின் மூலம் சிறப்பு நடவடிக்கைகளை உள்துறை அமைச்சு தற்போது மேற்கொண்டு வருகிறது.
தாமே பெற்ற புகார்களைத் தொடர்ந்து, இச்செயலுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் உத்தரவிற்கு இணங்கவே இம்முடிவு அமைந்துள்ளதாக, உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
வெளிநாட்டினரின் சட்டவிரோத நடவடிக்கைகளை முற்றிலுமாக ஒடுக்குவதற்கான செயல்பாடுகளை அமைச்சின் கீழ் செயல்படும், குடிநுழைவுத் துறை மற்றும் அரச மலேசிய போலீஸ் படை, பி.டி.ஆர்.எம் போன்ற நிறுவனங்கள் மேற்கொள்ளும் என்று அவர் கூறினார்.
''பிரதமர் தற்போது புகார்களைப் பெற்று வருகிறார். எனவே, நான் முன்னரே குறிப்பிட்ட வட்டார நிறுவனங்கள், அமலாக்க நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. குடிநுழைவு குற்றங்களைப் பொறுத்தவரை, நிச்சயமாக நாங்கள் குடிநுழைவுச் சட்டத்தின் கீழான குற்றங்களையும் கருத்தில் கொள்வோம். அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று குடிநுழைவுச் சட்டம் தெளிவாகக் கூறுகிறது,'' என்றார் அவர்.
சட்டவிரோதமாக வணிகம் செய்யும் ஒவ்வொரு வெளிநாட்டினரின் இருப்பிடத்தைக் கண்காணிப்பதில் தனது நிறுவனங்களின் மூலம் உள்துறை அமைச்சு சிறப்பு நிபுணத்துவம் பெற்றுள்ளதாக சைஃபுடின் குறிப்பிட்டார்.
இதனிடையே, மைகார்ட் மற்றும் புதிய வகை அனைத்துலக மலேசிய கடப்பிதழை நடைமுறைப்படுத்தி வழங்கும் முயற்சி திட்டமிட்டபடி நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.
எனினும், தற்போது, அவற்றுக்கான புதிய விண்ணப்பங்களுக்கு நடப்பிலுள்ள ஆவணங்களே பயன்படுத்தப்படும் என்றும், ஏனெனில் மீதமுள்ள ஆவணங்கள் இன்னும் சில மாதங்களுக்குப் போதுமானதாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
''நான் கூற விரும்புவது என்னவென்றால், இரண்டுமே திட்டமிட்டபடிதான் செயல்படுகின்றன. அதாவது, ஜூன் 1 முதல், நாங்கள் பழைய கையிருப்பின் அடிப்படையில் கடப்பிதழ்கள் அல்லது அடையாள அட்டைகளுக்கான விண்ணப்பங்களைத் தொடர்ந்து வழங்குவோம். பழைய ஒப்பந்தம் ஜூன் 1ஆம் தேதி முடிவடைந்துவிட்டது. ஆனால், கையிருப்பு இன்னும் இருக்கிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். எனவே, நாங்கள் ஒரு புதிய பதிப்பை வழங்கப் போகிறோம் என்றாலும், 2-3 மாதங்களுக்குப் போதுமான கையிருப்பை நாங்கள் அழிக்க வேண்டும் என்று அர்த்தமில்லை,'' என்றார் அவர்.
நாட்டின் அடையாள ஆவணங்களின் பாதுகாப்பை வலுப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, மலேசியா புதிய தோற்றமுடைய கடப்பிதழ் மற்றும் மைகார்ட் திட்டத்தையும் அறிமுகப்படுத்தும் என்று அவர் முன்னதாகக் கூறியிருந்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)