சுங்கை பட்டாணி, 08 ஜூன் (பெர்னாமா) -- கெடா சுங்கை பட்டாணிக்கு அருகிலுள்ள கம்போங் பாரு பினாங் துங்காலில், நேற்று ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அறுவர் உயிரிழந்த சாலை விபத்தில் சம்பந்தப்பட்ட லாரி ஓட்டுநருக்கு எதிராக போலீசார் செய்த தடுப்பு காவல் உத்தரவு விண்ணப்பத்தை, இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றம் நிராகரித்தது.
விபத்து நிகழ்ந்த சில மணி நேரத்திலேயே கைது செய்யப்பட்ட 49 வயதுடைய அந்நபரை விடுவிக்க மாஜிஸ்திரேட் முஹமட் அஸ்லான் பஸ்ரி அனுமதி அளித்தார்.
1987-ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து சட்டம் செக்ஷன் 41(1)-இன் கீழ் விசாரணைக்கு உதவ சம்பந்தப்பட்ட லாரி ஓட்டுநர் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக, நேற்று கொடா மாநில போலீஸ் தலைவர் டத்தோ அட்ஸ்லி அபு ஷா கூறியிருந்தார்.
அந்த லாரி ஓட்டுநரிடம் மேற்கொள்ளப்பட்ட சிறுநீரக பரிசோதனையில், அவர் போதைப்பொருள் உட்கொண்டிருக்காதது தெரிய வந்துள்ளது.
அதோடு, அவருக்கு எதிராக முன்னதாக ஏழு சம்மன்கள் இருப்பதும், அவற்றில் நான்கு இன்னும் நிலுவையில் இருப்பதும் விசாரணையில் கண்டறியப்பட்டதாக அட்ஸ்லி கூறினார்.
அந்நபருக்கு அதிகாரப்பூர்வ ஓட்டுநர் உரிமம் இருப்பதோடு, விபத்தின் போது அவர் லாரியை மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் ஓட்டிச் சென்றதாகவும் அவர் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)