Ad Banner
Ad Banner
 பொது

விசா அல்லது பயண அட்டையைப் பயன்படுத்தி வணிகம் தொடங்கும் வெளிநாட்டினர் மீது நடவடிக்கை

08/06/2026 02:43 PM

புத்ராஜெயா, 08 ஜூன் (பெர்னாமா) --  விசா அல்லது பயண அட்டையைத் தவறாகப் பயன்படுத்தி நாட்டில் வணிகங்களைத் தொடங்கும் வெளிநாட்டினர் மீது அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்கும்.

உள்ளூர் மக்கள், குறிப்பாக, நாடு முழுவதுமுள்ள சிறு வணிகர்களின் நலனைப் பாதுகாப்பதற்காக பல்வேறு நிறுவனங்களை உட்படுத்தி இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

''தொடர்பு அமைச்சு இவ்விவகாரத்தில் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு நான் கேட்டுக் கொள்கிறேன். ஏனென்றால், நாங்கள் போதுமான எச்சரிக்கையை வழங்கி விட்டோம். எச்சரிக்கை அல்ல, பலமுறை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு விட்டன. அவர்கள் அதனை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்'', என்றார் அவர்.

இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற தொடர்பு அமைச்சின் மாதாந்திர கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது டத்தோ ஶ்ரீ அன்வார் அதனை கூறினார்.

தங்களின் விசாக்களைத் தவறாக பயன்படுத்தி நாட்டில் வணிகம் தொடங்கும் வெளிநாட்டினரின் செயல், உள்நாட்டினரின் வேலை வாய்ப்புகளைப் பறிப்பதோடு, தற்போது மின்னியல் அல்லது மின் வணிக துறையை உள்ளடக்கிய சிறு வணிகர்களின் வியாபார வாய்ப்புகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாக, அன்வார் கூறினார்.

எனவே, எந்தவொரு வணிக உரிமைகளையும் அனுமதிகளையும் வழங்குவதற்கு முன்னதாக, சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களும் கடுமையான நடவடிக்கையை எடுப்பதோடு, மேலும் கடுமையான விதிமுறைகளையும் வகுக்க வேண்டும் என்று அவர் விவரித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)