Ad Banner
Ad Banner
 சிறப்புச் செய்தி

வைரவிழாவில் கால் பதித்த தஞ்சை கமலா இந்திரா பரத நாட்டிய வித்தியாலயா

07/06/2026 08:04 PM

கோலாலம்பூர், ஜூன் 07 (பெர்னாமா) -- மலேசியாவில், பரதநாட்டியக் கலையின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றி வருவதில் தஞ்சை கமலா இந்திரா பரத நாட்டிய வித்தியாலயா தனித்துவமான முத்திரை பதித்துள்ளது.

கலைத் துறையில் 60 ஆண்டு காலம் பயணித்து, வைரவிழாவில் கால் பதித்தித்திருக்கும் அந்த நடனப் பள்ளி, கலை மற்றும் கலாச்சாரத்தின் சிறப்பை கொண்டாடும் வகையில் பிரம்மாண்டமான 'GALA NIGHT' நிகழ்ச்சியை கொண்டாடியது.

1966ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நடனப்பள்ளியின் வழி, 60 ஆண்டுகால பரதநாட்டியக் கலைக்காக ஆற்றிவரும் அர்ப்பணிப்புமிக்க சேவையை, இந்த மாபெரும் நிகழ்ச்சி நினைவுகூர்ந்தது.

தங்களிடம் பரதக் கலையைக் கற்றுக் கொண்டு ஆசிரியர்களாக உருவாகியவர்கள் உட்பட கலை, கலாசாரம், கல்வி மற்றும் சமூகச் சேவைத் துறைகளில் சிறப்பான பங்களிப்புகளை வழங்கிய 48 பேர் இந்நிகழ்ச்சியில் அங்கீகரிக்கப்பட்டதாக தஞ்சை கமலா இந்திரா பரத நாட்டிய வித்தியாலயாவின் நோற்றுநர், நட்டுவ திலகம் இந்திரா மாணிக்கம் தெரிவித்தார்.

''எங்களிடமே படித்து, நடன ஆசிரியர்களாக உருவெடுத்து, இன்று அவர்கள் நாட்டியப் பள்ளியை  நடத்துகின்றனர். எல்லோருமே இந்தக் கலைச் சேவையை செய்கிறார்கள். அவர்களுடன் தொழில்நுட்ப கலைஞர்கள், ஊடகவியலாளர்களுக்கும் சிறப்பு செய்கிறோம். நாங்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியில் இணைகிறோம்,'' என்றார் அவர்.

மேலும், இந்நிகழ்ச்சியில் பரத நாட்டியம், நாட்டிய நாடங்கள் என்று பல்வேறு படைப்புகள் இடம்பெற்றன.

அதோடு, அந்த நடனப் பள்ளியின் வரலாறு, கடந்து வந்த பாதைகள், புகைப்படங்கள் ஆகியவற்றை உட்படுத்திய புத்தகம் ஒன்று இந்நிகழ்ச்சியில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் கண்டுள்ளது.

இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து, எதிர்வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதி கிருஷ்ணாயணம் எனும் நாட்டிய நாடகத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இந்திரா மாணிக்கம் தெரிவித்தார்.

இதனிடையே, முன்னாள் மற்றும் தற்போதைய மாணவர்களின் நினைவுகளையும் உணர்வுகளையும் மீட்டெடுக்கும் தருணமாகவும் இந்நிகழ்ச்சி அமைந்ததிருந்தது.

இந்த நடனப்பள்ளியில் பரதம் கற்றுக் கொண்ட சிலர் இந்திரா மாணிக்கதுடனான தங்களின் பயணங்களையும் வைரவிழா குறித்த மகிழ்ச்சியையும் பெர்னாமா செய்திகளிடம் பகிர்ந்து கொண்டனர்.

சனிக்கிழமை, கோலாலம்பூர், செந்தூலில் நடைபெற்ற இந்ந நிகழ்ச்சிக்கு தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ எம்.சரவணன் மற்றும் ஒருமைப்பாட்டு துணை அமைச்சர் யுனேஸ்வரன் ராம்ராஜ் சிறப்பு வருகைப் புரிந்திருந்தனர்.

- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)