தைபே, 07 ஜூன் (பெர்னாமா) -- தைவானில் நேற்று நடைபெற்ற 2026 நியூ தைபே சிட்டி திடல்தட வெற்றியாளர் போட்டியில் பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் மலேசியாவின் ஷெரீன் சாம்சன் வல்லபோய் முதலிடம் பிடித்தார்.
தமது அடைவுநிலையை மீட்டெடுப்பதற்கான ஒரு சவாலான காலகட்டத்தைக் கடந்த பிறகு, தேசிய ஓட்டப்பந்தய வீராங்கனையான அவர், இறுதியாகத் தங்கம் வென்று தனக்கான உரிய வெகுமதியைப் பெற்றார்.
28 வயதுடைய ஓட்டப்பந்தய வீராங்கனையான ஷெரீன் சாம்சன் வல்லபோய் 52.73 வினாடிகளில் ஓடி சாதனை படைத்தார்.
இதன் வழி, 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு முன்னதாக, தமது மிகச்சிறந்த அடைநிலையை தாம் நெருங்கி வருவதை அவர் நிரூபித்துள்ளார்.
அரையிறுதியில் 53.85 வினாடிகளில் ஓடி, இப்பருவத்தில் தனது சிறந்த நேரத்தைப் பதிவுசெய்த ஷெரீன், இறுதிப் போட்டியில் அதைவிடச் சிறப்பாகச் செயல்பட்டார்.
இரண்டாம் இடத்தை இலங்கை வீராங்கனை 53.16 வினாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கத்தை வென்ற வேளையில், ஆஸ்திரேலியா 53.86 வினாடிகளில் வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றியது.
தமது உண்மையான போட்டித் திறனையும் சிறந்த ஓட்ட வேகத்தையும் மீண்டும் பெறுவதற்காக அவர் நீண்ட காலமாகச் செய்த தியாகங்களும் கடின உழைப்பும் இந்த வெற்றியின் மூலம் பலனளித்துள்ளதால், ஷெரீனைப் பொறுத்தவரை இந்த வெற்றி அவருக்கு மிகவும் அர்த்தமுள்ளதாகும்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)