பழைய கிள்ளான் சாலை, 06 ஜூன் (பெர்னாமா) -- இன்று அதிகாலை கோலாலம்பூர் பழைய கிள்ளான் சாலையின் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடத்தப்பட்ட 'ஒப் சாப்பு' சோதனை நடவடிக்கையில் 78 சட்டவிரோத குடியேறிகளைக் கோலாலம்பூர் கூட்டரசு பிரதேசத்தின் மலேசிய குடிநுழைவுத் துறை கைது செய்துள்ளது.
இதில் இந்தோனேசியா, மியன்மார் மற்றும் இந்தியப் பிரஜைகள் கைது செய்யப்பட்டனர்.
சோதனையின் போது அதிகாரப்பூர்வ அடையாள அட்டையைச் சமர்ப்பிக்கத் தவறியதோடு, பல்வேறு இதர குடிநுழைவுக் குற்றங்களிலும் அவர்கள் ஈடுபட்டனர்.
40 குடியிருப்பு பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் மொத்தம் 200 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அவர்களில் 48 ஆண்கள் மற்றும் 30 பெண்கள் உட்பட 78 பேர் கைது செய்யப்பட்டதாகக் கோலாலம்பூர் கூட்டரசு பிரதேசத்தின் மலேசிய குடிநுழைவுத் துறை அறிவித்துள்ளது.
உள்ளூர் மக்களிடையே கவலையை ஏற்படுத்தும் வகையில், அப்பகுதிக்கு அதிகமான வெளிநாட்டினர் வருவது தொடர்பில் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளிடமிருந்து புகார்கள் கிடைத்ததைத் தொடர்ந்து இச்சோதனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும், கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் முறையான பயண ஆவணங்களைக் கொண்டிருக்காதது, நாட்டில் அனுமதிக்கப்பட்ட காலம் முடிந்தும் தங்கியிருந்தது மற்றும் சட்டவிரோதமாக வேலை செய்வதற்காக சமூக பயண அட்டையைப் பயன்படுத்தியது போன்ற குற்றங்களைப் புரிந்துள்ளனர்.
தடுத்து வைக்கப்பட்ட அனைவரும், 1959/63 ஆம் ஆண்டு குடிநுழைவுச் சட்டம், 1966 ஆம் ஆண்டு கடப்பிதழ் சட்டம், மற்றும் 1963 ஆம் ஆண்டு குடிநுழைவு விதிமுறைகள் ஆகியவற்றின்படி, ஆவணப்படுத்தல் மற்றும் மேல் விசாரணைக்காகக் கோலாலம்பூர் குடிநுழைவுத் தடுப்பு மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)