Ad Banner
Ad Banner
 சிறப்புச் செய்தி

சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம்; இயற்கையை நேசிப்போம்

05/06/2026 07:14 PM

கோலாலம்பூர், ஜூன் 05 (பெர்னாமா) -- பருவநிலை மாற்றம் உள்ளிட்ட இயற்கை வளங்கள் தொடர்பான பல்வேறு சவால்கள் அதிகரித்து வரும் நிலையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு முக்கியமான தேவையாக உருவெடுத்துள்ளது.

பசுமையான எதிர்காலத்தை உறுதி செய்வதில் அனைவரின் பங்களிப்பும் அவசியம்.

இதனைக் கருத்தில் கொண்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வும் பொறுப்புணர்வும் இளம் தலைமுறையினரிடமிருந்து தொடங்கப்பட வேண்டும் என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

பரபரப்பான வாழ்க்கைச் சூழலில், பெரும்பாலான மக்கள் இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் மீது போதிய கவனம் செலுத்தத் தவறி வருகின்றனர்.

போதிய கவனிப்பும் பராமரிப்பும் இல்லாததால் காலப்போக்கில் இயற்கை வளங்கள் அழிவை எதிர்நோக்கிச் செல்வதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கம் சுட்டிக் காட்டியது.

இதில் மெத்தனப்போக்குடன் இல்லாமல், எதிர்காலத்திற்கு சுற்றுச்சூழலின் அவசியத்தை மலேசியர்கள் தெரிந்து வைத்துக் கொண்டு வேண்டும் என்று அச்சங்கத்தின் கல்வி மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் என்.வி.சுப்பாராவ் தெரிவித்துள்ளார்.

''இன்னும் பலர் ஆங்காங்கே குப்பைகளை வீதுவதோடு, ஆறுகளையும் அசுத்தப்படுத்துகின்றனர். தண்ணீரை விரையப்படுத்தியும் நெகிழியைப் பயன்படுத்துவதையும் தொடர்கின்றனர். நம்மைச் சுற்றியுள்ள இயற்கை வளங்கள் நிறைந்த மரங்கள், பழப் பயிர்கள், வயல்கள் மற்றும் பூக்களைப் போல, நமது சுற்றுச்சூழலும் படிப்படியாக நம் கண்களிலிருந்து மறைந்து வருகிறது,'' என்றார் அவர்.

இதனிடையே, காடுகளில் மரங்கள் வெட்டப்படுவதாலும், மலைகளில் உள்ள மரங்கள் அழிக்கப்படுவதாலும், சுற்றியுள்ள பசுமையும் மழைப்பொழிவு குறைந்து அவ்வப்போது நிலச்சரிவுகள் ஏற்படுகின்றன.

முன்னேற்றம் என்ற பெயரில் இயற்கையின் அழகு மட்டுமல்லாது அதன் வளங்களும் அழிந்து வருவதாக சுப்பாராவ் குறைப்பட்டுக் கொண்டார்.

காடுகளைப் பராமரித்து, பாதுகாப்பதற்கும், அங்குள்ள உயிரினங்கள் அழிந்துவிடாமல் இருப்பதை உறுதி செய்வதற்கும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

இதற்கு இளம் தலைமுறையினர் முன்வந்து செயல் பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

''காடுகளில் உள்ள மரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். காடுகளின் வளம் குறையாமல் இருக்க மரங்கள் நட வேண்டும். உயர்கல்வி நிறுவனங்கள் உட்பட ஒவ்வொரு பள்ளியிலும், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்குச் சுற்றுச்சூழல் விழிப்புணர்வின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக அறிவிப்புப் பலகைகள், விளம்பரங்கள் மற்றும் சுவரொட்டிகள் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்,'' என்றார் அவர்.

எனவே, சுற்றுச்சூழலின் மகத்துவத்தை உணர்ந்து, வளரும் தலைமுறைக்கு அழகான மற்றும் தூய்மையான இயற்க்கை வளத்தை வழங்க முயற்சிக்க வேண்டும் என்று சுப்பாராவ் அறிவுறுத்தினார்.

இன்று ஜூன் ஐந்தாம் தேதி அனுசரிக்கப்படும் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பெர்னாமா செய்திகளிடம் அவர் இத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

பருவநிலை மாற்றத்தை மையமாகக் கொண்டு அனுசரிக்கப்படும் இத்தினம், பூமியின் அவசர எச்சரிக்கைகள் மற்றும் அதற்கு மனிதர்கள் அளிக்கும் பதில்கள் குறித்து இது கவனம் செலுத்துகிறது.

- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)