Ad Banner
Ad Banner
 பொது

மலேசியாவில் அணுசக்தி மேம்பாட்டின் எதிர்காலத்தை நோக்கி ஒரு குறிப்பிடத்தக்க அடியை எடுத்து வைத்துள்ளது தி.என்.பி

04/06/2026 08:18 PM

கோலாலம்பூர், ஜூன் 04 (பெர்னாமா) -- TNB Research நிறுவனம் மற்றும் China National Nuclear Corporation Overseas நிறுவனத்திற்கு இடையிலான தொழில்நுட்ப ஆலோசனை சேவை ஒப்பந்த விருது ஆவணப் பரிமாற்றத்தின் மூலம் Tenaga Nasional நிறுவனம் மலேசியாவில் அணுசக்தி மேம்பாட்டின் எதிர்காலத்தை நோக்கி ஒரு குறிப்பிடத்தக்க அடியை எடுத்து வைத்துள்ளது.

பொது அனைத்துலகப் போட்டி ஒப்பந்த செயல்முறை மூலம் வழங்கப்பட்ட இந்த ஒப்பந்தம், அணுசக்தி தயார்நிலை ஆய்வுகளுக்கு ஆதரவளிப்பதோடு தொழில்நுட்ப ஆலோசனை சேவையையும் வழங்கும்.

இன்று நடைபெற்ற 2026-ஆம் ஆண்டு எரிசக்தி மாற்ற மாநாடு, ETCon26-இல் பரிமாறிக் கொள்ளப்பட்ட நான்கு வியூக ஒப்பந்தங்களில் ஒன்றான இந்த முன்னெடுப்பு, மலேசியாவின் நீண்டகால எரிசக்தி திட்டமிடல் ஆற்றலை வலுப்படுத்தும் என்றும், நாட்டின் எதிர்கால எரிசக்தி கலவையில் அணுசக்தியின் சாத்தியமான பங்கை ஆராயும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பரிமாற்றத்தை, PETRA மற்றும் TNB-இன் மூத்த பிரதிநிதிகளுடன் இணைந்து எரிசக்தி மாற்றம் மற்றும் நீர் உருமாற்றத் துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அப்துல் ரஹ்மான் முஹமட்டும் பார்வையிட்டார்.

மற்றொரு ஆவணப் பரிமாற்றத்தில் TNB Repair and Maintenance நிறுவனத்திற்கும் Malakoff Technical Solution நிறுவனத்திற்கும் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. 

இதன் நோக்கம், இரு நிறுவனங்களின் மின் உற்பத்தி சொத்துக்கள் முழுவதிலும் உள்ள சாத்தியமான கூட்டு வணிக முயற்சிகள், தொழில்நுட்ப ஆதரவு மற்றும் பணியாளர் மேம்பாட்டு முன்னெடுப்புகள் ஆகியவை உட்பட மின் உற்பத்தி நிலையப் பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் முழுமையான சீரமைப்பு சேவைகளில் உள்ள வாய்ப்புகளை ஆராய்வதாகும்.

மற்றொரு ஒப்பந்தத்தின்படி, TNB Power Generation மற்றும் மற்றும் Mitsubishi Power Limited ஆகிய நிறுவனங்கள் எரிவாயு விசையாழிகள் மற்றும் மின்னாக்கிகளுக்கான ஒதுக்கீட்டு ஒப்பந்தத்தை முறைப்படுத்தின.

இறுதி ஆவணப் பரிமாற்றத்தில், எரிசக்தி அமைப்பு உருமாற்றத்திற்கான வியூக ஒத்துழைப்பு தொடர்பாக TNB மற்றும் Elia Group SA ஆகியவற்று இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)