நியூயார்க், 03 ஜூன் (பெர்னாமா) -- 2026 உலகக் கிண்ண காற்பந்து போட்டிக்கான பிரச்சார நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, அதன் வெற்றிக் கிண்ணம் அமெரிக்காவின் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
2014-ல் பிரேசிலில் கிண்ணத்தை வென்ற ஜெர்மனியின் பாஸ்டியன் ஷ்வைன்ஸ்டீகர் உட்பட, ரசிகர்கள், ஊடகங்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் அருகில் இருந்து இக்கிண்ணத்தை பார்க்கும் வாய்ப்பைப் பெற்றனர்.
அந்த உலகக் கிண்ணத்தை தொடுவதற்கும், தூக்குவதற்கும், முத்தமிடுவதற்கும் அனுமதிக்கப்பட்ட நபர்களில் ஷ்வைன்ஸ்டைகரும் ஒருவர்.
சிகாகோ ஃபயர் அணியுடன் தனது காற்பந்து விளையாட்டு வாழ்க்கையை முடித்துக் கொண்டு 2019-ல் ஓய்வு பெற்ற அவர், ஜெர்மனிய வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான வீரர்களில் ஒருவராகத் திகழ்கிறார்.
பாயன் முனிக் அணியில் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இருந்த ஷ்வைன்ஸ்டைகர் , பல பண்டெஸ்லிகா பட்டங்கள், ஜெர்மன் கிண்ணம் மற்றும் 2013 சாம்பியன்ஸ் லீக் ஆகியவற்றை வென்றார்.
அதன் பிறகு மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இணைந்து, பின்னர் மேஜர் லீக் ஆட்டங்களில் விளையாடினார்.
ஜெர்மனி அணிக்காக 121 போட்டிகளில் பங்கேற்றுள்ள அவர், 2014 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவைத் தோற்கடிக்க தேசிய அணிக்கு உதவினார்.
அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோவில் 2026 உலகக் கிண்ண போட்டி நடத்தப்படும் நிலையில், அது 48 அணிகள் மற்றும் 12 குழுக்களை உள்ளடக்கி புதிய வடிவத்தில் நடைபெறவுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)