சியோல், 03 ஜூன் (பெர்னாமா) -- கடந்த ஆண்டு அதிபர் தேர்தலில் லீ ஜே மியுங் வெற்றி பெற்ற பிறகு, நடைபெறும் நாடு தழுவிய அளவிலான, முதல் ஊராட்சித் தேர்தலில், தென் கொரிய மக்கள் இன்று வாக்களித்தனர்.
இத்தேர்தல், அதிபர் லீயின் ஆளும் ஜனநாயகக் கட்சிக்கு வலு சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லீயின் பதவிக்காலத்தில் முதல் ஆண்டின் மதிப்பீடாகக் கருதப்படும் இத்தேர்தலில், 16 நகரங்கள் மற்றும் மாகாணங்களிலும் வாக்காளர்கள் மேயர்கள், ஆளுநர்கள் மற்றும் கல்வித் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பார்கள்.
2024-ஆம் ஆண்டில், முன்னாள் அதிபர் யூன் சுக் இயோல் மேற்கொண்ட இராணுவச் சட்ட அமலாக்க முயற்சி தோல்வியுற்றதால் ஏற்பட்ட சர்ச்சையிலிருந்து, பழமைவாதக் கட்சியான 'பிபல் பவர் பார்ட்டி' மீண்டும் மீட்சி பெருமா என்பதைச் சோதிக்கும் முக்கியமான சோதனையாகவும் இந்தத் தேர்தல் பார்க்கப்படுகிறது.
தற்போது, ஜனநாயகக் கட்சி அதிபர் பதவியையும் நாட்டின் நாடாளுமன்றத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
இந்தத் தேர்தலில் அது ஒரு மகத்தான வெற்றியைப் பதிவுசெய்தால், 2020-க்குப் பிறகு ஜனநாயகக் கட்சி தனது மிக வலுவான அரசியல் ஆதிக்கத்தைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவுகள் வியாழக்கிழமை அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)