கோலாலம்பூர், ஜூன் 03 (பெர்னாமா) -- எஸ்.பி.எம் தேர்வில் தமிழ்மொழி ஓர் அங்கீகரிக்கப்பட்ட பாடமாக இருந்தாலும், சில பள்ளிகளில் அதற்கான கற்றல் - கற்பித்தலில் ஏற்பட்டுள்ள சிக்கலால் அத்தேர்வை எழுதுபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது.
இது பள்ளியின் சரிவிற்கு வித்திடுவதோடு, மாணவர்களின் மொழி மற்றும் பண்பாட்டு மரபினைப் பாதுகாக்கும் அடிப்படை உரிமையையும் நேரடியாக பாதிப்பதாக, கெஅடிலான் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் சிவமலர் கணபதி தெரிவித்தார்.
"2014ஆம் ஆண்டு நாடு முழுவதும் தமிழ்ப்பள்ளிகளில் முதலாம் ஆண்டு கல்வியைத் தொடங்கிய மாணவர்களின் எண்ணிக்கை 13,688 ஆக இருந்தது. ஆனால், அதே மாணவர் குழு 2024ஆம் ஆண்டு எஸ்பிஎம் தேர்வை எதிர்கொண்டபோது, தமிழ்மொழியை விருப்பப் பாடமாகத் தேர்வு செய்து எழுதியவர்கள் 7,609 பேர் மட்டுமே. இது சுமார் 45 விழுக்காடு வீழ்ச்சியைக் குறிக்கிறது," என்றார் அவர்.
இத்தகைய வீழ்ச்சி இந்திய சமுதாயத்திற்கு குறிப்பாக, தமிழ்ப்பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு மிகப் பெரிய பின்னடைவைக் கொடுக்கும் என்பதால் கல்வியமைச்சு இவ்விவகாரத்தை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும் என்று சிவமலர் கேட்டுக் கொண்டார்.
"தமிழ்மொழி பாடத்தை எஸ்.பி.எம் தேர்வில் எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்ததன் காரணம் குறித்து கல்வியமைச்சு விரிவாக ஆய்வு நடத்த வேண்டும். ஒவ்வொரு தகுதியான மாணவரும் தமிழ்மொழியைக் கற்று எஸ்.பி.எம் தேர்வில் அதனை ஒரு தேர்வு பாடமாக எடுப்பதற்கு அவர்களுக்கு சமமான உரிமை வழங்கப்பட வேண்டும் என்பது என் கோரிக்கை," என்று அவர் குறிப்பிட்டார்.
இடைநிலைப் பள்ளிகளில் தமிழ்மொழிக் கல்வியை எளிதாக அணுகக்கூடிய வகையில், தற்போதைய நடைமுறைகளை மறுபரிசீலனை செய்யுமாறு கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், கல்வி அமைச்சிடம் வெளிப்படையாக அறிவுறுத்தி இருந்ததையும் சிவமலர் நினைவுகூர்ந்தார்.
எனவே, தகுதியான அனைத்து மாணவர்களும் ஒரே முறையிலான தெளிவான கொள்கையை அமல்படுத்த கல்வி அமைச்சு முனைப்பு காட்ட வேண்டும்.
மேலும், தேர்வில் அமர விரும்பும் ஒவ்வொரு மாணவருக்கும் சமமான வாய்ப்பை உறுதி செய்யும் வகையில் அதற்கான நிரந்தர தீர்வை, அமைச்சு அடையாளம் கண்டு அதை விரைவில் அறிவிக்க வேண்டும் என்றும் பெர்னாமா செய்திகள் தொடர்பு கொண்ட போது சிவமலர் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)