கோலாலம்பூர், ஜூன் 1 (பெர்னாமா) -- இன்று தொடங்கி 2025ஆம் ஆண்டு இணையப் பாதுகாப்புச் சட்டம் ONSA-வின் கீழ், குழந்தை பாதுகாப்பு விதிமுறை CPC மற்றும் இடர் குறைப்பு விதிமுறை RMC ஆகியவை அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, மலேசியாவில் செயல்படும் அனைத்து சமூக ஊடகத் தளங்களும் அந்த சட்டங்களுக்குக் கட்டுப்பட வேண்டும்.
பாதுகாப்பான இணையத்தை உறுதி செய்வதற்கும், குறிப்பாக பாதிப்பை ஏற்படுத்தும் உள்ளடக்க அச்சுறுத்தல் மற்றும் இலக்கவியல் தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாடு ஆகியவற்றில் இருந்து சிறார்களைப் பாதுகாப்பதற்கும் இந்த நடவடிக்கை அவசியமானது என்று தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.
இணையப் பாதுகாப்பை வலுப்படுத்தவும், இலக்கவியல் சேவை வழங்குநர்களின் பொறுப்பை அதிகரிக்கவும் அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளில், அமலாக்க உரிமம் மற்றும் சரிபார்ப்பைச் செயல்படுத்துவதும் அடங்கும் என்று ஃபஹ்மி ஃபட்சில் கூறினார்.
''இது முதல் கட்டம் நடவடிக்கை என்று நான் நம்புகிறேன். விதிகளை மீறும் தளங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது உட்பட, நாம் எடுக்க வேண்டிய தொடர் நடவடிக்கைகளும் உள்ளன. பல ஆண்டுகள் இதைக் கவனித்துப் பார்த்தால், நம் நாட்டை விடத் தாங்கள் பெரியவர்கள் என்று கருதுபவர்கள் இருக்கிறார்கள். ஆனால், நம் நாட்டில் சம்பாதிக்க அவர்கள் தான் முன்னிலை வகிக்கிறார்கள்,'' என்றார் அவர்.
மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிமின் பிறந்தநாளை ஒட்டி இன்று நடைபெற்ற விருதளிப்பு விழாவில் கலந்து கொண்டப் பின்னர் ஃபஹ்மி செய்தியாளர்களிடம் பேசினார்.
- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)