Ad Banner
Ad Banner
 சிறப்புச் செய்தி

புத்தரின் போதனைகளை நினைவுகூரும் விசாக தினம்

31/05/2026 06:12 PM

செரெண்டா, மே 31 (பெர்னாமா) -- சித்தார்த்த கௌதமரின் பிறந்த நாளை முன்னிட்டு, இன்று உலகின் பல நாடுகளில் விசாக தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

அவரது உயரிய போதனைகளையும் சிந்தனைகளையும் நினைவுகூரும் வகையில், இன்று காலை முதலே பல புத்தர் ஆலயங்களில் பக்தர்கள் வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

சிலாங்கூர்,  செரெண்டாவில் உள்ள ஜிங் லூங் ஷான் வான் ஃபோ ஷி புத்தர் ஆலயத்திலும் விசாக தினம் சிறப்பாக அனுசரிக்கப்பட்டது.

சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலான இந்த ஆலயத்தின் விசாக தின வழிபாட்டில் அப்பகுதியில் வசிக்கும் சீனர்களும் இந்தியர்களும் கலந்து கொண்டனர்.

ஒவ்வோர் ஆண்டும், விசாக தினத்தன்று காலை தொடங்கி மாலை வரை தொடரும் வழிபாட்டில் சுமார் இரண்டாயிரம் பேர் கலந்து கொள்வார்கள்.

இம்முறை தொடர் விடுமுறை என்பதால், மக்கள் கூட்டம் சற்று அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கவதாக ஜிங் லூங் ஷான் வான் ஃபோ ஷி புத்தர் ஆலயத்தின் நிர்வாக அதிகாரி LIM BOON HEE தெரிவித்தார்.

வழிபாட்டில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் ஆலயத்தின் சார்பில் இலவசமாக உணவும் வழங்கப்படும்.

இந்தப் புனித நாளை முன்னிட்டு தேசிய இரத்த வங்கியுடன் இணைந்து இரத்த தானம் முகாம் நடைபெற்றதாகவும் அவர் கூறினார்

''ஒவ்வோர் ஆண்டும் ஆலயத்தில் புத்தருக்கு செய்யப்படும் நீராட்டும் வழிபாடு நடைபெறும். மெழுகுவர்த்தி வழிபாடும் நடைபெறும். விழிப்புணர்வை ஏற்படுத்த இரத்த தானம் முகாம் நடைபெறும். இன்று இரவு கோலாலம்பூர், பிரிக்பீல்ட்சில் அமைந்துள்ள மஹா விஹாரா புத்த ஆலயத்துடன் இணைந்து ஆலயத்தின் இரத ஊர்வலமும் நடைபெறும்,'' என்றார் அவர்.

இதனிடையே, விசாக தின வழிபாட்டில் கலந்து கொள்வதன் மூலம் மன அமைதியும், நேர்மறை எண்ணங்களும் கிடைப்பதாகப் பொதுமக்கள் தெரிவித்தனர்.

''ஒவ்வோர் ஆண்டும் வருவோம். மனம் புத்துணர்ச்சியடைகிறது. இங்கு வரும் மக்களிடையே ஒற்றுமையைக் காண முடிகின்றது,'' என்று கூறினர்.

அதோடு, சீனர்களும் இந்தியர்களும் இன பேதமின்றி ஒற்றுமையாக வழிபாடுகளை மேற்கொள்வதால், இந்த வழிபாடு சமூக ஒற்றுமையையும் மேலோங்கச் செய்வதாக அவர்கள் தெரிவித்தனர்.

- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)