ஈப்போ, 30 மே (பெர்னாமா) -- தமிழ் மாதமான வைகாசியில் விசாக நட்சத்திரம் இணையும் நாளில் கொண்டாடப்படும் வைகாசி விசாகம், முருகப் பெருமானின் அவதாரத் திருநாளாக இந்து சமயத்தில் போற்றப்படுகின்றது.
பக்தி, அறம் மற்றும் வீரத்தின் அடையாளமாக விளங்கும் கந்தப் பெருமானை வழிபடும் விதமாக உலகெங்கிலும் உள்ள முருகன் ஆலயங்களில் சிறப்பு பூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெறுவது வழக்கம்.
அவ்வகையில், பேராக், ஈப்போ, ஜாலான் லஹாட்டில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்தில் பக்தர்கள் திரள, வைகாசி விசாகத் திருவிழா இன்று சிறப்பாக நடைபெற்றது.
சுமார் 120 ஆண்டுகாலம் பழமை வாய்ந்த இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் வைகாசி விசாகத் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், பள்ளி விடுமுறை என்பதால் இவ்வாண்டு பக்தர்களின் கூட்டம் வழக்கத்திற்கு மாறாக அதிகமாக இருந்தது.
காலையில் நடைபெற்ற சிறப்பு பூஜைக்குப் பின்னர், 9 மணியளவில் பக்தர்கள் பால்குடங்களையும், காவடிகளையும் ஏந்தியவாறு தங்களின் நேர்த்திக் கடன்களைச் செலுத்த தொடங்கிவிட்டனர்.
ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்குப் பின்னர், பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
இதனிடையே, இன்றிரவு கந்தப் பெருமான் இராஜ அலங்காரத்துடன் அந்நகரைச் சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கவிருக்கிறார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)