கோலாலம்பூர், மே 30 (பெர்னாமா) -- காலத்தால் அழியாத செம்மொழி இலக்கியங்களில் ஒன்று திருக்குறள்.
ஆண்டுகள் கடந்தாலும் இன்றும் அதனை ஆய்வு செய்யும் அறிஞர்கள், பேராசிரியர்கள், மற்றும் தமிழ் ஆர்வலர்கள் இருக்கவே செய்கின்றனர்.
அந்த வகையில், வாழ்வியல் சிந்தனைகளை ஆராய்ந்து, வாழ்க்கையில் சமநிலையின் முக்கியத்துவத்தை விளக்கும் ஒரு முயற்சியாக மலாயா பல்கலைக்கழக பதிப்பகம் The Art of Balance எனும் நூலை இன்று வெளியீடு செய்துள்ளது.
மனிதர்களுக்கான வாழ்வியல் நெறிகளை எடுத்துரைக்கும் விதமாக மலாயாப் பல்கலைக்கழகத்தின் இரு முதுநிலை விரிவுரையாளர்கள் இணைந்து இந்த நூலை எழுதியிருக்கின்றனர்.
திருக்குறளில் புதைத்திருக்கின்ற மனம், உடல், ஆன்மா போன்ற தத்துவங்கள் அடிப்படையில் ஒரு தனிமனதின் வாழ்க்கையை மகிழ்ச்சியாக அமைத்துக் கொள்ள வழிவகுக்கும் ஓர் ஆய்வு நூலாகவே இது உருவாக்கப்பட்டுள்ளது.
இன்றைய தலைமுறையை செவ்விலக்கியம் எளிய முறையில் சென்றடைவதற்கு இந்நூல் நிச்சயமாக உதவியாக இருக்கும் என்று நூல் ஆசிரியர் மலாயாப் பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வியல் துறையின் முதுநிலை விரிவுரையாளர், அனுராதா ராஜசேகரம் தெரிவித்தார்.
''நாம் மனிதர்கள். மனிதர்கள் எப்படி செயல்படுகிறார்கள். நம்முடைய கூறுகள், கலாச்சாரம் ஆகியவற்றின் அடிப்படையே அறிவியல் சார்ந்ததுதான். அந்த அறிவியல் எப்படி திருக்குறளில் சொல்லப்பட்டிருக்கின்றது. மனம், உடல், ஆன்மாவில் அது எப்படி ஒருங்கிணைக்கப்பட்டிருக்கிறது என்பதைதான் இந்த நூல் எடுத்துரைக்கிறது,'' என்றார் அவர்.
இந்நூல் பொது மக்களுக்கு குறிப்பாக பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆய்வுகான குறிப்பு நூலாக இருக்கும் என்று மற்றொரு நூலாசிரியரான மலாய பல்கலைக்கழகத்தின் மொழி மற்றும் மொழியியல் புலத்தின் முதுநிலை விரிவுரையாளர் செல்வஜோதி இராமலிங்கம் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், வளங்குன்றா வளர்ச்சி குறித்தும் இந்நூலில் உட்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் விளக்கினார்.
''வளங்குன்றா வளர்ச்சியின் 17 இலக்குகளை அடிப்படையாகக் கொண்டு இந்த நூலில் பல தலைப்புகளில் இந்த ஆய்வை செய்திருக்கின்றோம். காரணம் வளங்குன்றா வளர்ச்சியில் நலமான வாழ்க்கை என்ற முக்கியமான இலக்கு ஒன்று அமைந்திருக்கின்றது. இந்த நூலில் வள்ளுவர் எப்படி 2000 ஆண்டுகளுக்கு முன்னதாகவே இவ்வாறான செய்திகளைக் குறிப்பிட்டிருக்கின்றார் என்பதும் எங்களுடைய நூலில் கூறியிருக்கின்றோம்,'' என்றார் அவர்.
இதனிடையே, இந்த நூல் அனைத்து தரப்பினர் வாசிக்கும் வகையில் அமைந்திருப்பதாக அதனை ஆய்வு செய்த பேராசிரியர் டத்தோ டாக்டர் ராஜா ராசையா கூறினார்.
கோலாலம்பூரில், நடைபெற்று வரும் 2026-ஆம் ஆண்டு கோலாலம்பூர் அனைத்துலக புத்தகக் கண்காட்சியில் The Art of Balance நூல் இன்று அதிகாரப்பூர்வமாக வெளீயீடு கண்டது.
- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)