வாஷிங்டன் டி.சி., 28 மே (பெர்னாமா) -- ஈரானுடனான ஒப்பந்தத்தில் தமக்கு இன்னும் திருப்தி ஏற்படவில்லை என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.
மேலும் அமைதி பேச்சுவார்த்தைகளில், அந்நாட்டின் மீதான தடைகளைத் தளர்த்துவது குறித்து அமெரிக்கா விவாதிக்கவில்லை என்றும் அவர் கூறுகிறார்.
''இல்லை, நாங்கள் எந்தத் தடைகளையும் தளர்த்துவது பற்றியோ அல்லது பணம் கொடுப்பது பற்றியோ பேசவில்லை. தடைகள் இல்லை, பணம் இல்லை, எதுவுமே இல்லை. அவர்கள் தங்களுடையது என்று கூறும் பணம் எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. அந்தப் பணத்தின் மீதான கட்டுப்பாட்டை நாங்கள் வைத்திருப்போம். அவர்கள் ஒழுங்காக நடந்துகொண்டு சரியானதைச் செய்யும்போது நாங்கள் அவர்களுடைய பணத்தை அவர்களிடம் ஒப்படைப்போம். ஆனால் தற்போது நாங்கள் அதைச் செய்யவில்லை. மேலும், இது ஒன்றையொன்று சார்ந்தது அல்ல'', என்று டோனல்ட் டிரம்ப் கூறினார்.
இதனிடையே, ஈரானும் ஓமானும் ஹோர்முஸ் நீரிணையைக் கட்டுப்படுத்தப் போவதாக எழுந்திருக்கும் கூற்றையும் அவர் நிராகரித்தார்.
தெஹ்ரானுடன் மேற்கொள்ளப்படும் சாத்தியமான கட்டமைப்பு ஒப்பந்தத்தின் கீழ் ஹோர்முஸ் நீரிணை உடனடியாகத் திறக்கப்படும் என்று டிரம்ப் தெரிவித்தார்.
''அந்த நீரிணை (ஹோர்முஸ்) அனைவருக்கும் திறக்கப்பட உள்ளது. அனைத்துலக கடல் பகுதி. அதை யாரும் கட்டுப்படுத்தப் போவதில்லை. நாங்கள் அதைக் கண்காணிப்போம். ஆனால் யாரும் கட்டுப்படுத்தப் போவதில்லை. அது நாங்கள் செய்துகொண்ட பேச்சுவார்த்தையின் ஒரு பகுதி. அவர்கள் கட்டுப்படுத்த விரும்புகிறார்கள். யாரும் அதைக் கட்டுப்படுத்தப் போவதில்லை. அது அனைத்துலக கடல் பகுதி. மேலும் ஒமான் மற்றவர்களைப் போலவே நடந்துகொள்ளும் அல்லது நாங்கள் அவர்களைத் தகர்க்க வேண்டியிருக்கும். அவர்கள் அதைப் புரிந்துகொள்வார்கள். அவர்கள் நலமாக இருப்பார்கள்'', என்றார் அவர்.
அதே வேளையில், அந்த நீரிணை யாருடைய கட்டுப்பாட்டிலும் இருக்காது என்று அவர் விளக்கினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)