அகமதாபாத், 27 மே (பெர்னாமா) -- இந்தியாவில் சைக்கிள் ரிக்ஷா ஓட்டுநர்கள் தங்கள் தினசரி வருமானத்தை ஈட்ட கடும் வெப்பத்தையும் சோர்வையும் பொருட்படுத்தாது தீவிரமாக வேலை செய்து வருகின்றனர்.
எனினும், கடுமையான வெப்ப அலை காரணமாக அவர்களில் பலர் தங்கள் வேலை நேரத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவின் வடமேற்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 43 முதல் 47 பாகை செல்சியஸ் வரை பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தரவுகள் காட்டுகின்றன.
மேலும், உத்தரப் பிரதேசம் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களின் பல பகுதிகளில் வெப்பநிலை வழக்கத்தை விட 3 முதல் 5 பாகை செல்சியஸ் வரை அதிகமாக உயர்ந்துள்ளது.
அகமதாபாத், ரான்சி மற்றும் கான்பூர் போன்ற நகரங்களில், ஒவ்வொரு நாளின் பெரும்பகுதியை வெளியில் கழிக்கும் தொழிலாளர்களுக்கு, சுட்டெரிக்கும் மதிய வெயில், நீண்ட நேரம் மிதிவண்டியைச் செலுத்த முடியாத சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், கடும் வெப்பத்தையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து வேலை செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்றும், ஒரு நாள் வேலைக்குச் செல்லாவிட்டால் முக்கியமான தினசரி வருமானத்தை இழக்க நேரிடும் என்றும் பல ரிக்ஷா ஓட்டுநர்கள் வருத்தம் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு மார்ச் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில், இந்தியாவில் 7,000-க்கும் மேற்பட்ட சந்தேகத்திற்கிடமான வெப்ப பக்கவாத பாதிப்புகளும், 14 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.
2024-ஆம் ஆண்டில் இதே காலகட்டத்தில், 40,000 சந்தேகத்திற்கிடமான பாதிப்புகளும், 110 உயிரிழப்புகளும் ஏற்பட்டன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)