Ad Banner
Ad Banner
 பொது

காசா மனிதாபிமானப் பணியில் பங்கேற்ற 28 மலேசியர்கள் பாதுகாப்பாக திரும்பினர்

25/05/2026 06:01 PM

சிப்பாங், 25 மே (பெர்னாமா) --  GLOBAL SUMUD FLOTILLA, ஜி.எஸ்.எஃப் காசா மனிதாபிமானப் பணியில் பங்கேற்றபோது, ​​இஸ்ரேலிய தரப்பால் தடுத்து வைக்கப்பட்டிருந்த 28 மலேசியர்கள், ஞாயிற்றுக்கிழமை இரவு பாதுகாப்பாக தாயகம் திரும்பினர்.

சுமுட் நுசாந்தாரா கட்டளை மையம், எஸ்.என்.சி.சி தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் சானி அராபி அப்துல் அலிம் அராபி உடன் சனிக்கிழமை இரவு மணி 11.25 அளவில் துருக்கியின் இஸ்தான்புல் அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட அவர்கள் நேற்றிரவு நாடு திரும்பினர்.

EK342 எமிரேட்ஸ் விமானத்தில் பயணித்த அவர்கள் நேற்றிரவு மணி 9.30 அளவில் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் கே.எல்.ஐ.ஏ-வின் முனையம் 1-ஐ வந்தடைந்தனர்.

பாலஸ்தீன ஆர்வலர்கள் மற்றும் ஆதரவாளர்களின் 100-க்கும் மேற்பட்ட குடும்ப உறுப்பினர்களுடன் அவர்களை வரவேற்ற சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷரி, எதிர்காலத்தில் பாலஸ்தீனம் குறித்த அனைத்துலக மாநாடுகளையும் கூட்டங்களையும் மலேசியாவிற்குக் கொண்டுவர மலேசிய அரசாங்கமும் மாநில அரசாங்கமும் உறுதி கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

''இந்தப் போராட்டத்தின் ஒவ்வொரு அம்சமும், அதன் ஒவ்வொரு அங்கமும் மேம்படுத்தப்பட்டு, வலுப்படுத்தப்பட்டு, நீண்ட காலமாக கனவு காணப்பட்ட காசாவின் விடுதலைக்கு வழிவகுக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்'', என்றார் அவர்.

நவீன மனிதாபிமானப் போராட்ட வரலாற்றில் இதுவரை இல்லாத அனைத்துலக ஒற்றுமை அலையை ஜி.எஸ்.எஃப் 2.0 உருவாக்கியுள்ளதாக எஸ்.என்.சி.சி நம்புகிறது.

''இந்த முயற்சி அங்கீகரிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், அனைத்துலக கடல் எல்லைப் பகுதியில் காலனித்துவ ஆட்சி கடற்கொள்ளையர்களும் கள்வர்களும் போல நடந்து கொண்டதன் மூலம் உலகளாவிய கோபத்தையும் எழச் செய்துள்ளது'', என்று சுமுட் நுசாந்தாரா கட்டளை மைய தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் சானி அராபி அப்துல் அலிம் அராபி தெரிவித்தார்.

மத்திய தரைக்கடலை கடந்து 960 மணிநேரம் அல்லது 40 நாள்கள் கடந்த இந்த பயணத்தில் 40 நாடுகளைச் சேர்ந்த 422 ஆர்வலர்கள் பங்கேற்றிருந்தனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)