கோலாலம்பூர், 24 மே (பெர்னாமா) -- எவரெஸ்ட் சிகரத்தை இன்றுவரை எத்தனை பேர் தொட்டிருந்தாலும், அங்கு முதன் முறையாக நாட்டின் ஜாலுர் கெமிலாங்கைப் பறக்கவிட்ட பெருமை, மலேசிய இந்தியர்கள் டத்தோ எம். மகேந்திரன் மற்றும் டத்தோ என்.மோகனதாஸ் ஆகிய இருவரையேச் சேரும்.
சுமார் 30 ஆண்டுகள் கடந்தபோதிலும் உலகின் உயர்ந்த சிகரத்தை அடைந்த அவர்களின் சாதனை, இளைஞர்கள் உட்பட நாட்டின் பல தரப்பினருக்கு தன்னம்பிக்கை, அர்ப்பணிப்பு மற்றும் அச்சமின்றி கனவுகளைத் துரத்தும் மனப்பாங்கினை ஏற்படுத்துகின்றது.
மேலும், கடினமான சவால்களையும் போராடி வெல்ல முடியும் என்பதை வாழ்நாள் சாதனையாக தாங்கள் நிரூபித்திருப்பதாக டத்தோ என்.மோகனதாஸ் கூறினார்.
1997-ஆம் ஆண்டு மே 23-ஆம் தேதி இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சின் ஆதரவோடு மலேசிய மலையேறுவோர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த மலேசிய எவரெஸ்ட் பயணம் மூலம் டத்தோ மகேந்திரனும் டத்தோ மோகனதாஸ்சும் அம்மலையில் வெற்றிகரமாக ஏறி சாதனை படைத்தனர்.
இத்தனை ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின்போது எவரெஸ்ட் பயணத்தின் பழைய நினைவுகள் கண்முன்னே நிழலாடுவதாக, டத்தோ மோகனதாஸ் பெர்னாமாவிடம் கூறினார்.
''நினைக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. 29 ஆண்டுகள் என்பது அண்மையில் நடந்தது முடிந்ததைப் போல இருக்கின்றது. அங்கிருந்து எவரெஸ்ட் பயணத்திற்கு 848 மீட்டர் மட்டுமே. இரண்டு திடல் அதாவது 400 கிலோமீட்டர் தூரத்திற்குதான் அந்த பயணம் அமைந்திருக்கும். எனவே, சிகரத்தை அடைவதற்கு எங்களுக்கு 13 மணிநேரம் தேவைப்பட்டது. பின்னர் இறங்குவதற்கு ஏழு மணிநேரம்'', என்றார் அவர்.
பத்து பேர் கொண்ட குழுவில் எண்மர் பின்வாங்கிய நிலையில், நாட்டு மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் முக்கிய பொறுப்பை அன்று இவர்கள் இருவரும் ஏற்று நாட்டிற்கு பெருமைத் தேடித் தந்தனர்.
பெரிய சாதனைகள் அடைய தியாகமும் பொறுமையும் அவசியம் என்று கூறிய அவர், எவரெஸ்ட் பயணத்திற்கான தயாரிப்பே தங்களுக்கு சுமார் மூன்று ஆண்டுகள் எடுத்ததாகவும், அதன் பின்னரே அந்த குழு உச்சியை வெற்றிகரமாக அடைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
தற்போது மலையேறும் நடவடிக்கை என்பது பெரும்பாலான இளைஞர்களுக்குப் பொழுதுப்போக்காகவும் இன்னும் சிலருக்கு அது வாழ்க்கை முறையாகவே மாறிவிட்டதையும் அவர் குறிப்பிட்டார்.
''தற்போது மலையேறும் நடவடிக்கை என்பது அனைவரின் வாழ்க்கை முறையாக மாறிவிட்டது. மலையேறுவதற்கு தேவையான பொருட்கள் இன்று எளிதில் பெற முடிகின்றது. எனவே, முறையான வழிகாட்டுதல்களுடன் பொறுமையைக் கடைப்பிடித்து மலையேறும் நடவடிக்கையில் ஈடுபடுவதும் சிறந்தது'', என்று அவர் கூறினார்.
இதனிடையே, மலையேறும் நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் அல்லது மலையேற நினைப்பவர்கள் கருத்தில் கொள்ள வேண்டிய பாதுகாப்பு அம்சங்களையும் மோகனதாஸ் இவ்வாறு விவரித்தார்.
''மலையேற நினைப்பவர்கள் ஆற்றோரங்களில் கூடாரங்களை அமைக்க வேண்டாம். பின்னர் மழையில் சேதமடைந்து விடும். அடர்த்தியான மரத்தின் கீழ் கூடாரங்களை அமைக்கக் கூடாது மற்றும் சமைப்பதற்காக பயன்படுத்தப்படும் சிரிய எரிவாயு கலனை கூடாரத்தினுள் வைக்கக் கூடாது. வெளியில் தான் வைக்க வேண்டும் பாதுகாப்பு கருதி'', என்று அவர் தெரிவித்தார்.
எவரெஸ்ட் சிகரத்தில் கால்பதித்து நேற்றோடு 29 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், பெர்னாமா செய்திகளுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் அவர் அத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)