கோலா சிலாங்கூர், மே 24 (பெர்னாமா) -- தமிழ்ப்பள்ளி மாணவிகளிடையே இலைமறைக்காயாக காணப்படும் வலைப்பந்து விளையாட்டுத் திறனை அடையாளப்படுத்தும் முயற்சியாக....
சிலாங்கூர் இந்திய விளையாட்டுப் பேரவையும் சிலாங்கூர் தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர் மன்றமும் இணைந்து சிலாங்கூர் தமிழ்ப் பள்ளிகளுக்கு இடையிலான வலைப்பந்து போட்டியை இரண்டாவது ஆண்டாக இன்று சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது.
கோலா சிலாங்கூர் மாவட்டத்தில் அமைந்துள்ள புக்கிட் ரோத்தான் பாரு தமிழ்ப்பள்ளி மைதானத்தில் நடைபெற்ற 12 வயது மாணவிகளுக்கான இப்போட்டியில், மாநில அளவிலிருந்து 27 பள்ளிகளைச் சேர்ந்த மொத்தம் 450 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு பள்ளிகளின் பங்கேற்பு, மாணவிகளின் ஆட்டத் திறன், அணிகளின் ஒத்துழைப்பு ஆகியவை சிறந்த வளர்ச்சி கண்டுள்ளதால், போட்டியின் தரமும் மெருகேறியிருந்ததாக சிலாங்கூர் இந்திய விளையாட்டுப் பேரவையின் தலைவர் மு.சு.மணியம் தெரிவித்தார்.
இந்தியர்களின் பாரம்பரியத்தில் இல்லாத விளையாட்டாக இருந்தாலும், மாணவிகளின் அபார ஆற்றல், அவர்களின் கடுமையான பயிற்சியையும் இந்த வலைப்பந்தின் மீது கொண்டிருக்கும் ஆர்வத்தை வெளிப்படுத்துவதாக போட்டியின் செயலாளர் அ.சுகுமாரன் கூறினார்.
கடந்தாண்டு இரண்டாவது நிலையில் வெற்றி பெற்ற சுங்கை ரெங்கம் தமிழ்ப்பள்ளி இவ்வாண்டு முதல் நிலையில் வாகை சூடியது.
இதனிடையே, துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி இரண்டாம் நிலையில் வெற்றி பெற்ற வேளையில், துவான் மீ தோட்டம் மற்றும் பூச்சோங் தமிழ்ப்பள்ளிகள் மூன்றாம் நிலை வெற்றிக் குழுவாக இடம் பிடித்ததது.
சுங்கை ரெங்கம் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த ஹேமார்ஷினி பத்மநாதன் சிறந்த
விளையாட்டாளராகவும், தீபழகி ரவீந்திரன் சிறந்த கோல் காவலராகவும், ஜெய்ஷனா ஜெயா ஜெயபோல் சிறந்த தற்காப்பு ஆட்டக்காரராகவும் தேர்வாகினர்.
தேசிய அளவில் இப்போட்டியை நடத்துவதற்கு ஏற்பாட்டுக் குழுவுடன் தாம் கலந்தாலோசித்து வருவதாக, மலேசிய தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர் மன்றத்தின் முன்னாள் தலைவர் எஸ்.எஸ். பாண்டியன் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)