கோலாலம்பூர், மே 22 (பெர்னாமா) -- உலகளவில் நிச்சயமற்ற பொருளாதார சூழலை இவ்வாண்டு எதிர்கொள்ள வேண்டிய நிலை இருந்தாலும் அந்தச் சவாலில் மலேசிய தொழில்துறையைச் சேர்ந்தவர்கள் எதிர்நீச்சல் அடித்து வெற்றி கொள்வதற்காக அரசாங்கமும் தொழில்துறை சார்ந்த தனியார் நிறுவனங்களும் பல்வேறு ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக, தொழில்துறை வல்லுநர்களை ஒருங்கிணைத்து ஆறாவது முறையாக தேசிய அளவிலான பொருளாதார கருத்தரங்கு ஒன்றினை, என்.சி.சி.ஐ.எம் எனப்படும் மலேசிய தேசிய வர்த்தக மற்றும் தொழில்துறை சபை நடத்தவிருப்பதாக அதன் உதவித் தலைவர் டத்தோ டாக்டர் ஏ.டி.குமாரராஜா தெரிவித்தார்.
"இந்த வர்த்தக கருத்தரங்கில் ஏராளமான இந்திய தொழில் முனைவோர், வர்த்தகர்கள் கலந்து கொண்டு பயன் அடைய வேண்டுமென்று நாங்கள் விரும்புகின்றோம். குறிப்பாக அனைத்து இனங்களையும் சேர்ந்த தொழில் முனைவோர் மற்றும் வர்த்தகர்கள் இதில் கலந்து கொள்வதால் அவர்களுடன் புதிய தொழில் தொடங்குவதற்கு இது ஒரு பாலமாக அமையும்," என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
கடந்த ஆண்டு இக்கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்த போது பல்வேறு அமைச்சுகள் முழுமையான ஆதரவு வழங்கி இருந்ததோடு அமைச்சர்களும் அரசாங்கத்தை சார்ந்துள்ள துறை மற்றும் இலாகாக்களின் அதிகாரிகளும் இதில் கலந்து முழுமையான ஆதரவை வழங்கியிருந்தனர்.
உள்நாட்டு தொழில்துறையாளர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இவ்வாண்டும் அதே நிலையிலான ஆதரவை தமது தரப்பு எதிர்ப்பார்ப்பதாக டத்தோ டாக்டர் ஏ.டி.குமாரராஜா குறிப்பிட்டார்.
'மாற்றத்தில் ஓர் உலகம்: சீர்குலைவுக் காலத்தில் நாட்டின் பொருளாதார எதிர்காலத்தைப் பாதுகாத்தல்' என்ற கருப்பொருளில், ஜூலை இரண்டாம் தேதி, இக்கருத்தரங்கு நடைபெறவிருக்கிறது.
இக்கருத்தரங்கில், கொள்கை வகுப்பாளர்கள், வணிகத் தலைவர்கள், தொழில்முனைவோர் மற்றும் சிந்தனைக் குழுக்கள் உட்பட மொத்தம் சுமார் 500 பேர் வரை கலந்து கொள்வார்கள் என்று தாம் எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தக் கருத்தரங்கு தொடர்பில் இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் குமாரராஜா இதனைத் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)