Ad Banner
Ad Banner
 பொது

சிறார்கள் மீதான பாலியல் வன்கொடுமை உள்ளடக்கங்கள்; கட்டுப்படுத்துவதற்கான நெறிமுறை இறுதிச் செய்யப்பட்டு வருகிறது

18/05/2026 05:13 PM

சுபாங் ஜெயா, 18 மே (பெர்னாமா) --  சிறார்கள் மீதான பாலியல் வன்கொடுமை தொடர்பான உள்ளடக்கங்கள், சி.எஸ்.எ.எம் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான பாதுகாப்பு நெறிமுறையை மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம், எம்.சி.எம்.சி இறுதிச் செய்து வரும் நிலையில், அவை இவ்வாண்டு ஜூன் மாதம் நடைமுறைப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இணையப் பாதுகாப்புச் சட்டம், ONSA-வின் கீழ் சி.எஸ்.எ.எம் முன்னுரிமை அளிக்கப்படும் பிரிவாக கருதப்படுவதால், இணையத் தளங்கள் அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும் என்று பாதுகாப்பு விதிமுறை குறிப்பிட்டிருப்பதாக தொடர்பு துணை அமைச்சர் தியோ நீ சிங் கூறினார்.

''தற்போது எம்.சி.எம்.சி நாங்கள் இன்னும் பாதுகாப்பு விதிமுறைகளை உருவாக்கி வருகிறோம். ஜூன் மாதத்தில் மிக விரைவில் நடைமுறைப்படுத்தப்படும். எனவே, தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்கள் உடனடியாக அகற்றப்படுவதை உறுதிச் செய்வதற்கும், ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு பயனருக்கும் பாதுகாப்பான ஒரு இலக்கவியல் உலகத்தை உருவாக்குவதற்கும் இந்த தளத்திற்குச் சிறந்த ஒத்துழைப்பைப் பெற முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்'', என்றார் அவர்.

இன்று, சிலாங்கூர், சுபாங் ஜெயாவில் எம்.சி.எம்.சி-இன் ஏற்பாட்டில் நடைபெற்ற உலக தகவல்தொடர்பு மற்றும் தகவல் சமூக தினம், WTISD மற்றும் GICT எனப்படும் தகவல் தொழில்நுட்பத்தில் பெண்கள் என்ற நிகழ்ச்சியை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்த பின்னர், அவர் செய்தியாளர்களிடம் அதனை கூறினார்.

இதனிடையே, கடந்தாண்டு பாலியல் வன்கொடுமை வழக்குகள் 152-ஆக பதிவாகியிருக்கும் நிலையில், இவ்வாண்டில் இதுவரை 100 வழக்குகள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருப்பதாக, அரச மலேசிய போலீஸ் படையில் புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டி தியோ விளக்கினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)