Ad Banner
Ad Banner
 பொது

2026 எண் 2, அரசியலமைப்பு சட்டத் திருத்த மசோதா ஜூன் 22 தாக்கல் செய்யப்படலாம்

18/05/2026 04:47 PM

ஜாலான் பார்லிமன், 18 மே (பெர்னாமா) --  தேசிய சட்டத்துறைத் தலைவர் மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் ஆகியோரின் பொறுப்புகளைப் பிரிப்பதை நோக்கமாகக் கொண்ட 2026-ஆம் ஆண்டு எண் 2, அரசியலமைப்பு சட்டத் திருத்த மசோதா, வரும் ஜூன் 22-ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் முதலாவது, இரண்டாவது மற்றும் மூன்றாவது வாசிப்பு நடைமுறைகளின்போது ஒரே நேரத்தில் நிறைவுச் செய்யப்படும் என்று தாம் நம்புவதாக சட்டம் மற்றும் கழகச் சீர்த்திருத்தத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அசாலீனா ஒத்மான் சைட் தெரிவித்தார்.

சுதந்திரக் காலம் முதலே வலுப்படுத்தப்பட்டு வந்த அதிகாரப் பகிர்வு என்பது ஒரு கடுமையான நடவடிக்கை என்பதால் அச்சட்டத் திருத்த மசோதாவின் தாக்கல் நாட்டின் புதிய வரலாற்றை உருவாக்கும் என்று அசாலீனா கூறினார்.

இந்த சட்ட மசோதா, நாடாளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையினரின் ஆதரவையோ அல்லது குறைந்தபட்சம் 148 வாக்குகளையோ பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இந்த சட்ட மசோதா மக்களவை சிறப்புத் தேர்வு செயற்குழுவிற்குப் பரிந்துரைக்கப்படுவதற்கு முன்னர் இருந்த சட்ட வரைவுத் திருத்தங்களுடன் ஒப்பிடும்போது தற்போதைய சட்ட வரைவு மிகவும் அண்மைய பதிப்பாகும்.

''ஆம், நாங்கள் கொண்டுவந்த முதல் சட்ட மசோதாவினால் தான். எனவே, இப்போது நாங்கள் புதிய முன்மொழியப்பட்ட சட்டத் திருத்தத்தின் மூலம் சரி செய்யப் போகிறோம். ஜூன் 22-ஆம் தேதி, நாங்கள் அதை நாடாளுமன்றத்தின் முதல் வாசிப்பிற்கு கொண்டு வந்து, என்ன நடந்தது என்பதை விளக்குவோம்'', என்று அவர் கூறினார்.

இன்று நாடாளுமன்றத்தில் மக்களவை சிறப்புத் தேர்வு செயற்குழு கூட்டத்தில் கலந்துக் கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அசாலீனா அதனைக் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)