ஈப்போ, 16 மே (பெர்னாமா) -- ஒருங்கிணைக்கப்பட்ட தேர்வு சான்றிதழ், யு.ஈ.சி கல்வித் தகுதி கொண்ட மாணவர்கள் மலாய் மொழி மற்றும் வரலாறு பாடங்களில் தேர்ச்சி பெற வேண்டும் தற்போதைய நிபந்தனை, பிரதான கல்விக்கு இல்லாமல் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் சமமான மற்றும் நியாயமான கொள்கையாக உள்ளது.
இந்த கட்டாய நிபந்தனை சீன தனியார் பள்ளிகளுக்கு மட்டுமல்லாது, நாடு முழுவதும் உள்ள அனைத்துலக பள்ளிகள், தஹ்ஃபிஸ் கல்வி நிலையங்கள், மற்றும் அரபுக் கல்வி பள்ளிகளுக்கும் சமமாக அமல்படுத்தப்படுவதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
''இப்போது, அனைத்துலக பள்ளிகளுக்கு நாங்கள் நிபந்தனைகளை விதித்துள்ளோம் அல்லவா? அனைத்துலக பள்ளிகளில் நிறைய மலாய் மாணவர்களும், மலேசிய மாணவர்களும் உள்ளனர். எனவே, எங்களுக்கும் அதே நிபந்தனைகள் உள்ளன. மேலும், அரபுப் பாடத்திட்டம் முழுவதையும் அரபியிலேயே கற்பித்து, மலாய் மொழிக்கும் வரலாற்று பாடத்திற்க்கும் முக்கியத்துவம் கொடுக்காத சமயப் பள்ளிகள் மற்றும் அரபுப் பள்ளிகளுக்கும் நாங்கள் அதே நிபந்தனைகளை விதித்துள்ளோம்,'' என்றார் அவர்.
இன்று சனிக்கிழமை பேராக், ஈப்போவில் நடைபெற்ற 55-வது தேசிய அளவிலாக ஆசிரியர் தினக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அன்வார் இப்ராஹிம் இதனைத் தெரிவித்தார்.
கணக்கியல் போன்ற துறைகளில் யு.ஈ.சி பட்டதாரிகளை சேர்ப்பதற்கான தொழில்நுட்ப அமலாக்கம், சம்பந்தப்பட்ட தொழில்முறை அமைப்புகளின் மதிப்பீட்டிற்கு உட்பட்டதாக இருக்கும் எனவும் அவர் தெளிவுபடுத்தினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)