கூடாட், 09 பெர்னாமா (பெர்னாமா) -- நாட்டின் இலக்கவியல் உருமாற்றம் மற்றும் செயற்கை நுண்ணறிவு, ஏ.ஐ கொள்கைகள் கோலாலம்பூர் முதன்மை பல்கலைக் கழகங்கள் அல்லது கழகங்களில் மட்டும் கவனம் செலுத்தாமல், அடித்தட்டு மக்களையும் சென்றடைய வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.
அனைத்து மக்களுக்கும், குறிப்பாக புறநகர், தீவு மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் உள்ள ஏழைகளுக்கும் சமூகத்தினருக்கும் நியாயமான முறையில் கிடைப்பதை உறுதிசெய்ய, புதிய தொழில்நுட்பக் கொள்கை, ஒவ்வொரு பகுதிக்கும் மாவட்டத்திற்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்றும் பிரதமர் எடுத்துரைத்தார்.
''எனவே, படித்த, செல்வந்த நகர்ப்புற வர்க்கத்தினருக்கும், ஏழைகளுக்கும் இடையே, குறிப்பாக சபா முழுவதிலும் உள்ள புறநகர் பகுதிகளிலும், தீவுகள் மற்றும் மலைப்பகுதிகளிலும், ஒரு தொடர்பின்மை, அதாவது ஒரு இடைவெளி உள்ளது,'' என்றார் அவர்.
இலக்கவியல் வளர்ச்சி, நகர்ப்புறங்களுக்கும் கிராமப்புறங்களுக்கும் இடையிலான இடைவெளியை அதிகரிக்காமல், மாறாக மக்களின் அறிவு, திறன்கள் மற்றும் புதிய வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கான தூண்டுகோலாக செயல்படுவதை உறுதி செய்வதில் மடானி அரசாங்கம் தொடர்ந்து கவனம் செலுத்தும்.
இன்று, கூடாட்டில் பூலாவ் பாங்கி மக்களுடன் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் அவ்வாறு கூறினார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]