Ad Banner
Ad Banner
Ad Banner
 

ஓ.பி.ஆர் விகிதம் 2.75 விழுக்காடாக நிலைநிறுத்தம்

07/05/2026 06:25 PM

கோலாலம்பூர், 07 மே (பெர்னாமா) -- நிதியியல் கொள்கை நிலைப்பாடு விலை நிலைத்தன்மை மற்றும் நீடித்த பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் வகையில், பேங்க் நெகாரா மலேசியா, பி.என்.எம், ஓ.பி.ஆர் எனப்படும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை 2.75 விழுக்காடாக நிலைநிறுத்தியது.

குடும்பச் செலவினங்கள், முதலீட்டு செயல்பாடுகள், பல ஆண்டுகள் நீடிக்கும் திட்டங்கள், அங்கீகரிக்கப்பட்ட முதலீடுகள் மற்றும் தேசிய முதன்மைத் திட்டங்கள் ஆகியவற்றின் ஆதரவுடன், மலேசியாவின் வலுவான அடிப்படைகள் தொடர்ந்து பொருளாதார மீள்திறனைத் தொடர்ந்து ஆதரிக்கும் என்று இன்று வெளியிட்ட ஓர் அறிக்கை பி.என்.எம் தெரிவித்தது.

நீடித்த உள்நாட்டுத் தேவை மற்றும் உலகளாவிய தொழில்நுட்பத் துறையின் தொடர்ச்சியான விரிவாக்கம் ஆகியவற்றின் ஆதரவுடன், 2026-ஆம் ஆண்டின் முதல் காலாண்டிலும் உலகளாவிய வளர்ச்சி வலுவாக இருந்ததாக பி.என்.எம் கூறியது.

எனினும், எரிசக்தி மற்றும் பொருள்களின் விலை உயர்வு உட்பட மத்திய கிழக்கு மோதலால் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் ஆகியவை, உலகளாவிய வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளதையும் அது மறுக்கவில்லை.

மலேசியாவைப் பொறுத்தவரை, மின்னியல் மற்றும் மின்னணு ஏற்றுமதிகளின் வலிமையால் வெளித்துறை தொடர்ந்து பயனடையும் அதேவேளையில் சுற்றுப் பயணிகளின் வருகை மிதமான அளவில் இருந்தாலும், ஆதரவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய கிழக்கில் நீடிக்கும் மோதல் மற்றும் குறைந்த கச்சாப் பொருள் உற்பத்தி ஆகியவற்றால் உள்நாட்டு வளர்ச்சி பாதகத்திற்கு உட்பட்டே உள்ளது என்று பி.என்.எம் குறிப்பிட்டுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)