புத்ராஜெயா, 05 மே (பெர்னாமா) -- 110 கோடி ரிங்கிட் மதிப்புள்ள முதலீட்டு வழக்கு விசாரணை குறித்த தகவல்களை, மறைப்பதற்கான அவசியம் தமக்கு இல்லை என முன்னாள் பொருளாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரஃபிசி ரம்லி தெரிவித்திருக்கிறார்.
தம் மீதான மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் எஸ்.பி.ஆர்.எம்-இன் விசாரணையில், இதுவரை ஊழல் அல்லது பணம் தொடர்பான கூறுகள் இடம்பெறவில்லை என்றும், மாறாக அந்த விசாரணை நடைமுறை அம்சங்களில் மட்டுமே கவனம் செலுத்தியதாகவும் அவர் கூறுகிறார்.
''இது எளிதானது, ஏனென்றால் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணை பணத்துடனோ, ஊழலுடனோ தொடர்புடையது அல்ல; இது ஒரு நடைமுறை. அதாவது, அரசாங்கப் பதிவுகள் என எல்லா ஆவணங்களும் அங்கே இருக்கின்றன. ஆகவே மீண்டும் சொல்கிறேன், மறைப்பதற்கு ஒன்றுமில்லை. மறைப்பதற்கு ஒன்றுமில்லை. எப்படியிருந்தாலும், இது எளிதானது. ஏனென்றால் இந்த விசாரணை இதுவரை தான்,'' என்றார் அவர்.
இருப்பினும், தற்போது விசாரணை தொடர்பாக கூடுதல் கருத்துகளை தெரிவிக்க முடியாது என்று பண்டான் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஃபிசி குறிப்பிட்டார்.
மின்னியல் உபரிப்பாகத் தொழில்துறையில் பொருளாதார அமைச்சுக்கும் பிரிட்டனைச் சேர்ந்த ஏ.ஆர்.எம் நிறுவனத்திற்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட வியூக ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பான முதலீட்டுப் பரிவர்த்தனைகளில், அதிகார மீறல் மற்றும் முறைகேடுகள் குறித்த விசாரணைக்கு உதவுவதற்காக எஸ்.பி.ஆர்.எம் அதிகாரிகளால் அவர் விசாரிக்கப்படுகிறார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]