கோலாலம்பூர், 03 மே (பெர்னாமா) -- அடுத்த வாரம் நடைபெறத் திட்டமிடப்பட்டிருக்கும் ஒருமைப்பாட்டு அரசாங்கத்தின் தலைமைத்துவ ஆலோசனை மன்றக் கூட்டத்தில், நெகிரி செம்பிலான் மந்திரி புசார் பதவியின் நிலை உட்பட பல்வேறு அண்மைய விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்படும் என்று அதன் செயலவைத் தலைவர் டத்தோ டாக்டர் அஷ்ராஃப் வஜ்டி டுசுகி கூறினார்.
அரசாங்கத்தில் உள்ள கட்சிகளுக்கு இடையிலான கொள்கைகள் மற்றும் நிலைப்பாடுகள் குறித்த விவகாரங்களை ஆராய்வதற்கும், சம்பந்தப்பட்ட மாநிலத்தில் உள்ள அரசக் கழகம் மற்றும் சடங்குகள் தொடர்பான பிரச்சனைகளைக் கையாள்வதற்கும் இக்கூட்டம் அவசியம் என்று அவர் தெரிவித்தார்.
“கூட்டம் அடுத்த வாரம் நடைபெறும். பல்வேறு அம்சங்கள் விரிவாக விவாதிக்கப்படும். விவாதிக்கப்படும் விவகாரங்களில் அதுவும் (மந்திரி புசார் பதவி விவகாரம்) ஒன்றாக இருக்கலாம்,” என்றார் அவர்.
ஒருமைப்பாட்டு அரசாங்கத்தை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கான நோக்கத்தின் அடிப்படையிலேயே எந்தவொரு விவாதமும் நடைபெறும் என்று டாக்டர் அஷ்ராஃப் கூறினார்.
நெகிரி செம்பிலானில் நிலவும் பிரச்சனையைத் தீர்ப்பதற்காக, கட்சியின் அரசியல் செயற்குழுவிற்கும் நம்பிக்கைக் கூட்டணிக்கும் இடையே உடனடியாக ஒரு சந்திப்பு நடத்தப்பட வேண்டும் என்று முன்னதாக அம்னோ அழைப்பு விடுத்திருந்தது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)