ஜாலான் புத்ரா, 03 மே (பெர்னாமா) -- கடந்த மூன்று ஆண்டுகளாக மடானி அரசாங்கத்தின் நிர்வாகத்தின் கீழ் பூமிபுத்ராவை வலுப்படுத்தும் செயல்திட்டம் மிகவும் தீவிரமாகவும், உறுதியாகவும், துணிச்சலாகவும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
சில தரப்பினர் கூறுவது போல் பூமிபுத்ராவின் நலன்களைப் புறக்கணிக்கும் அளவிற்கு அரசாங்கம் ஒருபோதும் உயர்நிலைக் குழுவை ஆதரிக்கவில்லை என்பதை இந்த அணுகுமுறை நிரூபிப்பதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
இன வேறுபாடின்றி தேர்வில் 10A பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் மெட்ரிகுலேஷனில் கல்வியைத் தொடர்வதற்கான வாய்ப்பை அரசாங்கம் வழங்கிய போதிலும், பூமிபுத்ராக்களுக்கான தற்போதைய ஒதுக்கீட்டிற்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டதை டத்தோ ஶ்ரீ அன்வார் சுட்டிக்காட்டினார்.
''உதாரணமாக, சிறந்த மதிப்பெண்கள் அதாவது 10ஏ பெற்ற மாணவனுக்கு தானியங்கி முறையில் பல்கலைக்கழகத்தில் கல்வியைத் தொடர வாய்ப்பு வழங்கப்படும் என்று சமீபத்தில் அரசாங்கம் ஒரு முடிவை எடுத்துள்ளது. அதே வேளையில், 90 விழுக்காட்டு பூமிபுத்ரா மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷன் படிப்பிற்கான வாய்ப்பும் வழங்கப்படும். எனவே, விவாதம் என்று வரும்போது, ஒன்றைத் தேர்ந்தெடுக்காதீர்கள்'', என்றார் அவர்.
அரசாங்கத்தின் அடிப்படைக் கொள்கைகள் மாறாமல் சீராக இருந்தாலும், நாட்டின் நிலைத்தன்மைப் பேணப்படுவதை உறுதிசெய்யும் வகையில் அவற்றை பொது அறிவோடும் விவேகத்தோடும் செயல்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் கூறினார்.
மற்றொரு நிலவரத்தில், Majlis Amanah Rakyat, மாரா சட்டத் திருத்தத்தின் வரைவு மூன்று மாதங்களுக்குள் பூர்த்திச் செய்ய டத்தோ ஸ்ரீ அன்வார் உத்தரவிட்டுள்ளார்.
பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அது தொடர்பான கொள்கைகளை ஒருங்கிணைப்பதன் வழி, பூமிபுத்ராக்களின் பொருளாதாரத்திற்கான ஒரு முக்கிய அமைப்பாகவும், மேம்பாட்டிற்கான ஓரிட மையமாகவும் விளங்கும் மாராவின் செயல்பாடுகளைச் சீரமைப்பதும் இந்நடவடிக்கையில் அடங்கும் என்று அவர் கூறினார்.
''எனவே, புதிய மாரா சட்டத்தின் வரைவு இந்த ஆண்டு இறுதிக்குள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். நான் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதில்லை. இதற்கு ஏழு முதல் எட்டு மாதங்கள் ஆக வேண்டியதில்லை. மூன்று மாதங்களுக்குள் வரைவை என்னிடம் கொடுக்க வேண்டும்'', என்று அவர் கூறினார்.
பிரதமரும் நிதி அமைச்சருமான அன்வார், இன்று கோலாலம்பூர் உலக வாணிப மையத்தில் நடைபெற்ற மாராவின் 60ஆம் ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றியபோது இவ்வாறு கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)