வாஷிங்டன் டி.சி, ஏப்ரல் 30 (பெர்னாமா) -- ஈரான் தனது அணுசக்தித் திட்டம் தொடர்பாக வாஷிங்டனுடன் ஓர் ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொள்ளும் வரை, அந்நாட்டை அமெரிக்கக் கடற்படை முற்றுகையின் கீழ் வைத்திருக்கும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணையின் மீதான முற்றுகையை நீக்குவதற்காகவே ஈரான் ஓர் ஒப்பந்தத்தை எட்ட விரும்புவதாகக் கூறிய டிரம்ப் எனினும், நீரிணையை மீண்டும் திறப்பதையும், அணுசக்திப் பேச்சுவார்த்தைகளை ஒத்திவைப்பதையும் நோக்கமாகக் கொண்ட ஈரானின் மூன்று கட்டத் திட்டத்தை நிராகரித்தார்.
தற்போதைய சூழலில், முற்றுகையே அழுத்தத்தை ஏற்படுத்துவதற்கான மிகவும் பயனுள்ள வழிமுறை என்று வலியுறுத்திய டோனல்ட் டிரம்ப், எண்ணெய் ஏற்றுமதி செய்ய இயலாத காரணத்தினால் ஈரான் கடும் அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளதாக அமெரிக்கச் செய்தி தளமான 'Axios'-க்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.
பேச்சுவார்த்தை முட்டுக்கட்டையை உடைக்கும் நம்பிக்கையில், ஈரான் மீது "குறுகிய மற்றும் சக்திவாய்ந்த" தொடர் தாக்குதல்களை நடத்துவதற்கான திட்டத்தை அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு தயாரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் தற்போது தொலைபேசி வாயிலாகத் தொடர்வதாக டிரம்ப் தெரிவித்தார்.
"எனக்குத் தெரியவில்லை. அது சூழ்நிலையைப் பொறுத்தது. நாங்கள் பேச்சுவார்த்தைகள் நடத்துகிறோம்; இப்போதும் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம். ஒரு காகிதத்தைப் பார்ப்பதற்காகவெல்லாம், இனி ஒவ்வொரு முறையும் 18 மணி நேர விமானப் பயணங்களை மேற்கொள்ளப்போவதில்லை. நாங்கள் அதைத் தொலைபேசி வாயிலாகவே செய்கிறோம். அது மிகவும் வசதியாக இருக்கிறது. நானே நேரடியாகத் தொலைபேசியில் அழைக்கிறேன், அல்லது என் உதவியாளர்களைக் கொண்டு அழைக்கச் சொல்கிறேன். ஆனால், விடை உங்களுக்குத் தெரிந்ததே. எனக்கு எப்போதும் நேரடிச் சந்திப்புகளே பிடிக்கும். சொல்லப்போனால், அதுவே சிறந்தது என்று நான் கருதுகிறேன்," என்றார் அவர்.
இந்நிலையில், அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படாது என்பதற்கு அவர்கள் ஒப்புக்கொள்ளும் வரை, எப்போதுமே ஒரு ஒப்பந்தத்தை எட்ட முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஈரானும் அமெரிக்காவும் ஏப்ரல் 11ஆம் தேதி பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடத்திய பேச்சுவார்த்தை, பிப்ரவரி 28ஆம் தேதி தொடங்கிய போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான உடன்பாட்டை எட்டத் தவறிவிட்டது.
எனினும், ஏப்ரல் 8ஆம் தேதி பாகிஸ்தானின் தலையீட்டினால் இரண்டு வார கால போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அது டிரம்பால் நீட்டிக்கப்பட்ட வேளையில், இந்தப் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)