Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

24 இந்தோனேசிய புலம்பெயர்ந்தோரை கடத்தியதாக இல்லத்தரசி மீது குற்றச்சாட்டு

30/04/2026 04:02 PM

மஞ்சோங், ஏப்ரல் 30 (பெர்னாமா) -- இம்மாத தொடக்கத்தில் 24 இந்தோனேசிய புலம்பெயர்ந்தோரைக் கடத்தியதாக, இல்லத்தரசி ஒருவர் மீது இன்று மஞ்சோங் செக்‌ஷன் நீதிமன்றத்தில் இரண்டு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

நீதிபதி அசிசா அஹ்மட் முன்னிலையில் தம்மீதான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது, குற்றஞ்சாட்டப்பட்ட உமி கல்சும் ஒமார் நோர் பாலசுப்ரமணியம் அதை மறுத்து விசாரணைக் கோரினார்.

கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி, பின்னிரவு மணி 3.30 அளவில், Manjung-ங்கில் உள்ள பத்து 11 செகாரி சாலையோரத்தில், இந்தோனேசியாவைச் சேர்ந்த ஆண்கள் எண்மரையும் ஒரு பெண்ணையும் கடத்தியதாக உமி கல்சும் மீது முதல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

அதைத் தொடர்ந்து அதே நாள், அதே மாவட்டத்தில், அதிகாலை மணி 4.00 அளவில், பத்து 12 செகாரி, ஜாலான் செகாரியில் 11 ஆண்கள் மற்றும் நான்கு பெண்களை அவர்களின் வீட்டிலிருந்து கடத்தியதாக அப்பெண் மீது மற்றொரு குற்றமும் சுமத்தப்பட்டது.

மேலும், 15 இந்தோனேசிய புலம்பெயர்ந்தோரைக் கடத்தியது தொடர்பிலான இரண்டு குற்றச்சாட்டுகளை, சம்பந்தப்பட்ட அந்த விசாரணையின் போது, தியோடோரஸ் செரன் என்ற இந்தோனேசிய ஆடவர் ஒப்புக்கொண்டார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும், 2007-ஆம் ஆண்டு ஆள்கடத்தல் மற்றும் புலம்பெயர்ந்தோர் கடத்தல் தடுப்புச் சட்டம், சட்டம் 670-இன் செக்‌ஷன் 26A இவ்வழக்கு விசாரிக்கப்படுகிறது.

இவ்வழக்கின் மறுவிமடுப்பை மே 22-ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

அங்குள்ள தங்குமிடத்தின் பராமரிப்பாளராக இருந்த அவ்வாடவர், இந்தோனேசியக் குடிமக்களான 10 ஆண்கள் மற்றும் ஐந்து பெண்களை ஒரே இடத்தில், ஒரே தேதியில் கடத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)