கோத்தா பாரு, ஏப்ரல் 30 (பெர்னாமா) -- கடந்த வாரம் தமது தந்தையைக் கொலை செய்த குற்றத்திற்காக, மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர், இன்று கோத்தா பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.
இம்மாதம் ஏப்ரல் 20-ஆம் தேதி காலை மணி 10.30 அளவில் கம்போங் பவுங் பாயாமில் உள்ள அவரது வீட்டில் 83 வயதான முஹ்மட் இசாக்கை கொலை செய்ததாக முஹ்மட் அஸ்வான் முஹ்மட் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
குற்றவியல் சட்டம் செக்ஷன் 302-இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரணத் தண்டனை அல்லது 40 ஆண்டுகளுக்கு மேற்போகாத சிறைத் தண்டனை மற்றும் 12-முறைக்கும் குறையாத பிரம்படிகள் விதிக்கப்படலாம்.
பிரேதப் பரிசோதனை அறிக்கை இன்னும் கிடைக்கவில்லை என்றும், அந்த நபரை மனநலப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும் என்றும் துணை அரசு தரப்பு வழக்கறிஞர் முஹ்மட் நட்சிர் அப்துல்லா தெரிவித்தார்.
குற்றம் சாட்டப்பட்டவர் பேராக், உலு கிந்தாவில் உள்ள மனநல மருத்துவமனைக்கு குற்றவியல் சட்டம் செக்ஷன் 342-இன் கீழ் மனநல மதிப்பீட்டிற்காக அனுப்ப மாஜிஸ்திரேட் ராயிஸ் இம்ரான் ஹமிட் உத்தரவிட்டார்.
மேலும், இவ்வழக்கின் மறுசெவிமடுப்பை ஜூன் 30-ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)