ஷா ஆலம், ஏப்ரல் 28 (பெர்னாமா) -- வெளிநாட்டில் இருப்பதாக நம்பப்படும் 'eHati ' என்ற இல்லற தன்முனைப்பு நிகழ்ச்சியின் தோற்றுநரும் அவரது கணவரையும் கண்டறிவதற்காக, அரச மலேசிய போலீஸ் படை பி.டி.ஆர்.எம், அனைத்துலக போலீசார் இன்டர்போலின் ஒத்துழைப்பை நாடியுள்ளது.
சம்பந்தப்பட்ட அவ்விரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டால் இன்டர்போல், பி.டி.ஆர்.எம்-இடம் தகவல் தெரிவிக்கும் என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஷசாலி கஹார்தெரிவித்தார்.
"இரண்டு சந்தேக நபர்களும் இன்னும் மலேசியாவிற்கு வெளியே இருப்பதாக நாங்கள் நம்புகிறோம். சம்பந்தப்பட்ட நாடுகளில் அவர்கள் இருப்பது கண்டறியப்பட்டால், கைது நடவடிக்கைகளை மேற்கொள்ள போலீசாரால் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது," என்றார் அவர்.
சர்ச்சைக்குரிய eHATI இல்லற தன்முனைப்பு நிகழ்ச்சின் தோற்றுநரும் அவரது கணவரும், அவர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதற்கு முந்தைய நாள் நவம்பர் 14-ஆம் தேதி வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றதாக நம்பப்படுகிறது.
அச்சமயத்தில், அத்தம்பதியர் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள ஒரு நாட்டில் இருப்பதாக நம்பப்பட்டது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)