கோலாலம்பூர், 27 ஏப்ரல் (பெர்னாமா) -- மடானி30 என்ற விளம்பர குறியீட்டைப் பயன்படுத்தி 30 விழுக்காட்டு கழிவில் மின்சார ரயில் ஈ.டி.எஸ் மற்றும் ஈ.ஆர்.டி சேவைகளுக்கான டிக்கெட்டுகளை வாங்கும் திட்டம் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் இதுவரை 21,000 டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளதாக, Keretapi Tanah Melayu நிறுவனம், KTMB நடவடிக்கைப் பிரிவு தலைமை அதிகாரி அஸ்ஃபார் சக்காரியா கூறினார்.
அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினத்தை எதிர்கொள்ளும் அதே வேளையில், மக்களின் பயணச் செலவுகளைக் குறைப்பதற்கு உதவும் நோக்கில் அரசாங்கத்துடன் இணைந்து சம்பந்தப்பட்ட நிறுவனம் கொண்டுள்ள உறுதியை இத்திட்டம் பிரதிபலிப்பதாக அஸ்ஃபார் சக்காரியா விவரித்தார்.
"அனைத்து ஈ.டி.எஸ் இரயில்களும் அதாவது ஜோகூர் பாருவில் இருந்து பாடாங் பெசார் வரை, பகாங் மற்றும் கிளந்தான் வழியாக ஜோகூர் பாருவில் இருந்து தும்பாட்டிற்கு இருவழி இரயில் பயணங்களைக் கொண்டுள்ளது. நாளொன்றுக்கு ஒன்று ஏறுவதற்கு, மற்றொன்று இறங்குவதற்கு. தற்போது ஈ.டி.எஸ்-இன் எண்ணிக்கை சுமார் 44 ஆகும். இந்த 44 ரயில்களும் தர நிலை வகுப்பைச் சேர்ந்தவை மட்டுமே. மேலும், இது 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் 15 முதல் அக்டோபர் 14-ஆம் தேதி திங்கள் முதல் வெள்ளி வரை மேற்கொள்ளப்படும் பயணத்தை உள்ளடக்கியது", என்றார் அவர்.
இன்று, பெர்னாமா வானொலியில் ஒளியேறிய, "Jendela Fikir: Rel Menghubungkan Rakyat, Menggerakkan Negara" நிகழ்ச்சியில் சிறப்பு பிரமுகராக கலந்து கொண்ட அஸ்ஃபார் சக்காரியா அத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
தரமான பொது போக்குவரத்திற்கான அணுகலை அதிகரிப்பது மட்டுமின்றி நிலையான, வசதியான மற்றும் ஆற்றல்மிக்க போக்குவரத்து முறைகளுக்கு மாறுவதை ஊக்குவிக்கும் முயற்சிகளுக்கும், நகரங்கள் மற்றும் வட்டாரங்களுக்கு இடையிலான இணைப்பை மேம்படுத்துவதற்கும், போக்குவரத்து அமைச்சு முன்னெடுத்துள்ள இம்முயற்சி பயனளிப்பதாக அவர் கூறினார்.
ஜோகூர் பாரு-பாடாங் பெசார் மற்றும் ஜோகூர் பாரு-தும்பாட் ஆகிய வழித்தடங்களுக்கான அனைத்து ஈ.டி.எஸ் சேவைகளையும் இச்சலுகை உள்ளடக்கியிருக்கிறது.
மேலும், ஏப்ரல் 15 தொடங்கி அக்டோபர் 14-ஆம் தேதி வரை வார நாள்களில், அதாவது திங்கள் முதல் வெள்ளி வரை பயணம் மேற்கொள்வதற்கு அந்த டிக்கெட்டுகளைப் பயன்படுத்தலாம் என்றும் அவர் விளக்கினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)