Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

ஆபத்தான முறையில் பேருந்தை செலுத்திய ஓட்டுநருக்கு ஏழு மாத சிறை & 8,000 ரிங்கிட் அபராதம்

24/04/2026 04:29 PM

அலோர் காஜா, ஏப்ரல் 24 (பெர்னாமா) -- கடந்த வாரம் அபாயகரமான முறையில் வாகனத்தை செலுத்தியக் குற்றத்தை ஒப்புக்கொண்ட விரைவுப் பேருந்து ஓட்டுநர் ஒருவருக்கு, அலோர் காஜா மாஜிஸ்திரேட் நீதிமன்றம், இன்று ஏழு மாத சிறைத் தண்டனையையும், 8,000 ரிங்கிட் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.

குற்றம் சாட்டப்பட்ட 53 வயதுடைய முஹ்மட் தம்ரின் இப்ராஹிம், கைது செய்யப்பட்ட ஏப்ரல் 21-ஆம் தேதியிலிருந்து அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை அமல்படுத்தப்பட வேண்டும் என்று மஜிஸ்திரேட் ஷூ யீ தமது தீர்ப்பில் உத்தரவிட்டிருந்தார்.

ஒருவேளை அவ்வாடவர் அபராதத்தைச் செலுத்தத் தவறினால், கூடுதலாக அவருக்கு ஐந்து மாத சிறைத் தண்டனையும், தீர்ப்பு வழங்கப்பட்ட நாளிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு வாகனத்தை செலுத்துவதற்கு தடையும் விதிக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.

ஏப்ரல் 14ஆம் தேதி பிற்பகல் மணி 3.50 மணியளவில், வடக்கு - தெற்கு நெடுஞ்சாலையின், தெற்கு நோக்கிச் செல்லும் 196.1 கிலோமீட்டர் பகுதியில், பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் பேருந்தை செலுத்தியதாக அவ்வாடவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 5,000 முதல் 15,000 ரிங்கிட் வரையிலான அபராதமும் விதிக்க வகை செய்யும் 1987ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டம் செக்‌ஷன் 42 உட்பிரிவு ஒன்றின் கீழ் அவர் மீது முன்னதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)