புத்ராஜெயா, ஏப்ரல் 24 (பெர்னாமா) -- Microsoft Elevate: தேசிய செயற்கை நுண்ணறிவு AI திறனை உருவாக்குதல் என்ற முயற்சியின் கீழ், தொழில்நுட்பத் தீர்வுகள் ஆக்கப்பூர்வமாக அதன் இலக்கிடப்பட்ட குழுக்களைச் சென்றடைவதை உறுதி செய்ய, பல்வேறு துறைகளில் உள்ள குறிப்பிட்ட தேவைகளை இலக்கவியல் அமைச்சு கண்டறியும்.
கல்வியாளர்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறைகள், கல்வி கழகங்கள் மற்றும் பொதுச் சேவை துறை ஊழியர்கள் ஆகியோர் இந்த இலக்கிடப்பட்ட குழுக்களில் அடங்குவர் என்று அதன் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.
பல்வேறு துறைகள் மற்றும் சமூகங்களில் தனிப்பட்ட தேவைகளைப் புரிந்துகொள்வதன் வழி, குறிப்பாக வர்த்தகங்களை வலுப்படுத்துவதிலும் தற்போதுள்ள சவால்களை எதிர்கொள்வதிலும், ஏ.ஐ பயன்பாட்டை உறுதி செய்வதில் முக்கிய கவனம் செலுத்தப்படும் என்று அவர் கூறினார்.
"தற்போது கேள்வி என்னவென்றால், தொழில்நுட்பம் அந்தத் தீர்வுகள் தேவைப்படும் குழுக்களை உண்மையிலேயே சென்றடைகின்றதா இல்லையா என்பதுதான். அது எங்களுக்குத் தெரிந்த விஷயம் என்று நான் கருதுகிறேன். எனவே, நாங்கள் குறிப்பிட்ட தேவைகளைக் கண்டறிந்து, அவற்றை தீர்க்க முயற்சிக்கிறோம். வெவ்வேறு துறைகளைத் தனித்தனியாகக் கவனித்து, இந்த முயற்சி நாடு முழுவதும் விரிவடைவதை உறுதி செய்வதோடு, தொழில்நுட்பம் தங்களுக்கு பயனளிக்க வேண்டிய அனைத்துத் தரப்பினரையும் கருத்தில் கொள்கிறோம்," என்றார் அவர்.
இன்று வெள்ளிக்கிழமை Microsoft Elevate-ஐ அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)