கோலாலம்பூர், 23 ஏப்ரல் (பெர்னாமா) -- இந்தியாவிற்குப் பயணம் செய்யும் மலேசியர்கள் புறப்படுவதற்கு, குறைந்தது 72 மணி நேரத்திற்கு முன்னதாக, மின்னியல் வருகை அட்டை, e-Arrival Card-ஐ கட்டாயமாக விண்ணப்பித்து சமர்ப்பிக்க வேண்டும் என்று புதுடெல்லியில் உள்ள மலேசிய தூதரகம், பயண ஆலோசனையை வெளியிட்டுள்ளது.
மலேசிய தூதரகத்தின் சமூக ஊடகக் கணக்குகளில் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, ஒ.சி.ஐ எனப்படும் இந்திய வம்சாவளி அட்டை உரிமையாளர்கள் உட்பட அனைத்து மலேசிய பிரஜைகளுக்கும் இந்த விதிமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பயணிகள் தங்களது பயணத்திற்கு குறைந்தது 72 மணி நேரத்திற்கு முன்னதாக, indianvisaonline.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
பயணிகள் தங்களின் மின்னியல் வருகை அட்டை உறுதிப்படுத்தலின் இலக்கவியல் அல்லது அச்சிடப்பட்ட நகலையும் வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும், இந்த நிபந்தனை, செல்லுபடியாகும் விசா மற்றும் பயண ஆவணங்களுடன் கூடுதலாக இணைக்கப்பட வேண்டும்.
ஆகவே, மலேசியர்கள் தங்கள் பயணத்திற்கு முன்னர் அண்மைய பயண விதிமுறைகளைச் சரிபார்த்துக் கொள்ளுமாறும், புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டிகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட இந்திய அமலாக்கத் தரப்பை அணுகுமாறும் மலேசிய தூதரகம் வலியுறுத்தியுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)