பொந்தியான், ஏப்ரல் 22 (பெர்னாமா) -- பொந்தியான் தாமான் டாமாய் பகுதியில் நடைபெற்ற சுய விருப்ப ரோந்து திட்டம் எஸ்.ஆர்.எஸ் மற்றும் ருக்குன் தெத்தாங்காவின் சமூக நிகழ்ச்சியில் தேசிய ஒருமைப்பாட்டு துணை அமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ் கலந்து கொண்டு, சமூக ஒற்றுமை மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்தும் அரசின் முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவித்தார்.
தாமான் டாமாய் ருக்குன் தெத்தாங்கா சமூகத்தினருடன் நேரடியாகக் கலந்துரையாடி சுய விருப்ப ரோந்து திட்டத்தைச் சிறப்பாக முன்னெடுத்து வரும் உறுப்பினர்களின் அர்ப்பணிப்பு மற்றும் முயற்சிக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஜொகூர் தேசிய ஒருமைப்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு துறை இயக்குநர் நூருல் அக்மாலினா சம்சூடின், துணை தலைமை இயக்குநர் நோர் சாஹாஹிருடின் அமின் ஹுசேன், தாமான் டாமாய் கேஆர்டி தலைவர் முஹம்மத் பௌசி யாஹ்மின், சிகாமாட் மாவட்டப் போலீஸ் தலைவர் சூப்ரின்டெண்டன் ஹட்ரட் ஹுசேன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியின் முக்கியப் பகுதியாகத், துணை அமைச்சர் எஸ்.ஆர்.எஸ் குழுவினருடன் மோட்டார் சைக்கிள் ரோந்து பயணத்தில் கலந்து கொண்டு பல இடங்களில் உள்ள மையப் பகுதிகளையும் நேரில் பார்வையிட்டார். இதன் மூலம் சமூக ரோந்து பணியின் நடைமுறை செயல்பாடுகளை அவர் அருகிலிருந்து கவனித்தார்.
சுய விருப்ப ரோந்து திட்டம் என்பது சமூகத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் முக்கிய முயற்சி என்றும், குற்றச் செயல்களைத் தடுக்கும் மற்றும் அண்டை வீட்டாரிடையே நல்லிணக்கத்தை வளர்க்கும் ஒரு முக்கிய தளம் என்றும் அவர் கூறினார்.
மேலும், இளைஞர்கள் அதிக அளவில் இந்த திட்டத்தில் இணைந்து செயல்படுவது மிகவும் பாராட்டத்தக்கது எனவும், இது எதிர்கால சமூக பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டை வலுப்படுத்தும் முக்கிய அடித்தளமாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
கேஆர்டி தாமான் டாமாய் சமூகத்தின் ஒற்றுமை, ஒழுக்கம் மற்றும் தொடர்ச்சியான அர்ப்பணிப்பு மற்றும் கேஆர்டி குழுக்களுக்கு முன்னுதாரணமாக அமைந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)