Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

136,115 ரிங்கிட் கையூட்டு; எல்.ஜே.டி தலைமை இயக்குநர் மீது குற்றச்சாட்டு

22/04/2026 05:43 PM

கோலாலம்பூர், 22 ஏப்ரல் (பெர்னாமா) -- மலேசிய நில அளவை வாரியமான, எல்.ஜே.டி (L-J-T) நிதிகள் தொடர்பில் தமது பதவியைப் பயன்படுத்தி 136,115 ரிங்கிட்16 சென் மதிப்புடைய பணத்தை லஞ்சமாகப் பெற்றதாக சுமத்தப்பட்ட இரு குற்றச்சாட்டுகளை, மலேசிய அளவை மற்றும் வரைபடத்துறையின் தலைமை இயக்குநர் டத்தோ ஹஸ்ரி ஹசான் மறுத்துள்ளார்.

இன்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில், நீதிபதி சுசானா ஹுசின் முன்னிலையில் அக்குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்ட பின்னர்,எல்.ஜே.டி-இன் தலைவருமான அவர் அதனை மறுத்து விசாரணைக் கோரினார்.

எல்.ஜே.டி-இன் தலைவர் என்ற அடிப்படையில் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி, 30,201 ரிங்கிட் 16 சென் மதிப்பிலான எல்.ஜே.டி நிதியை தமது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக உபயோகித்தார் என்று டத்தோ ஹஸ்ரி மீது, முதல் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

கடந்த 2004-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4 முதல் 9-ஆம் தேதி வரை அமெரிக்கா,  நியூயார்க்கில் நடைபெற்ற அனைத்துலக புவிசார் தகவல் நிர்வகிப்பிற்கான, ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் கூட்டத்தில் அவர் பங்கேற்றிருந்தது குறித்து எல்.ஜே.டிவாரியக் கூட்டத்தில் விவாதித்தபோது முதல் குற்றம் சம்பந்தப்படுத்தப்பட்டது.

கடந்தாண்டு ஜனவரி 29 முதல் பிப்ரவரி 4-ஆம் தேதி வரை, சவூதி அரேபியாவின் மடினா மற்றும் ஜெடா ஆகிய இடங்களில் நடைபெற்ற கூட்டங்களில் பங்கேற்றது தொடர்பில், தமது பதவியை தவறாகப் பயன்படுத்தி, 105,914 ரிங்கிட்டை கையூட்டாகப் பெற்றதாக அவர் மீது இரண்டாவது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. 

2024-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 2 மற்றும் டிசம்பர் 31 ஆகிய இரு தேதிகளில், கோலாலம்பூரில் உள்ள ஒரு தங்கும் விடுதி மற்றும் விஸ்மா எல்.ஜே.டி-இல் உள்ள வாரியக் கூட்ட அறையிலும் அவர் இக்குற்றங்களைப் புரிந்ததாக கூறப்பட்டது.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]