ஷா ஆலம், 22 ஏப்ரல் (பெர்னாமா) -- ஏறக்குறைய 23 கோடி ரிங்கிட் மதிப்பிலான 'சகாட்' (zakat) நிதியை முறைக்கேடு செய்த வழக்கு விசாரணைக்கு உதவும் பொருட்டு, அரசு சார்பற்ற அமைப்பின் துணைத் தலைவர் உட்பட இரண்டு நபர்கள், இன்று முதல் ஏப்ரல் 25 வரை நான்கு நாள்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், எஸ்.பி.ஆர்.எம் இன்று ஷா ஆலம் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் செய்த விண்ணப்பத்தைத் தொடர்ந்து, முறையே 57 மற்றும் 61 வயதான அந்த இருவருக்கும் எதிரான தடுப்புக் காவல் உத்தரவை, மஜிஸ்திரேட் அமீரா மஸ்துரா காமிஸ் பிறப்பித்தார்.
முன்னதாக, அவ்விரு நபர்களும் காலை மணி 9.07 அளவில் எஸ்.பி.ஆர்.எம் வேனில் ஷா ஆலம் நீதிமன்ற வளாகத்திற்கு வந்தனர்.
நேற்று, சிலாங்கூர் எஸ்.பி.ஆர்.எம், ஏறக்குறைய 23 கோடி ரிங்கிட் மதிப்பிலான 'சகாட்' நிதியை முறைக்கேடு செய்ததாக சந்தேகத்தின் பேரில், அரசு சார்பற்ற அமைப்பின் துணைத் தலைவர் உட்பட மூவரை, சிலாங்கூர் எஸ்.பி.ஆர்.எம் நேற்று கைது செய்தது.
கிள்ளான் பள்ளதாக்கில், நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் 50 மற்றும் 60 வயதுக்குட்பட்ட இரு ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அதே நேரத்தில், 50 வயதுக்கு உட்பட்ட மற்றொரு நபர், சிலாங்கூர் எஸ்.பி.ஆர்.எம் அலுவலகத்தில் வாக்குமூலம் அளிக்க வந்தபோது பிற்பகல் மணி 2 அளவில் கைது செய்யப்பட்டார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]