கோலாலம்பூர், 20 ஏப்ரல் (பெர்னாமா) -- உலகின் மிகவும் கடுமையான வணிக விநியோகச் சங்கிலிகளில் துல்லியத்தையும் பொறுப்புணர்வையும் அடிப்படையாகக் கொண்ட வலுவான பண்பாட்டின் மூலம் மலேசிய நிறுவனங்கள் தங்களுக்கான இடத்தைப் பெற்றுள்ளன.
அது, தற்காப்பு விண்வெளித் துறைக்கும் சமமாகப் பொருந்தக்கூடியது என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
மலேசியா தனது அனைத்து முக்கிய பங்காளிகளுடனும் பணி உறவுகளைப் பேணி வருவதால், எங்கும் நிலவும் அரசியல் சிக்கல்களின்றி, உள்நாட்டு விநியோகிப்பாளர்கள் அனைத்துலக சங்கிலிகளில் ஒருங்கிணைவதற்கு வழிவகுப்பதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
''நாம் கட்டமைக்க முயற்சிக்கும் தற்காப்புத் தொழில்துறை அடித்தளம், மலேசிய நிறுவனங்கள் தங்கள் பணியின் வலிமையால் அனைத்துலக விநியோகச் சங்கிலிகளில் தங்களின் இடத்தைப் பெற்று தக்கவைத்துக் கொள்ள உதவும். மேலும், ஓர் ஒப்பந்தத்தைப் பெற்றுத்தரும் கட்டொழுங்கு, அதனைத் தக்கவைத்துக் கொள்ளவும் வழிவகுக்கும். அது ஒன்றுதான் கட்டியெழுப்பத் தகுந்த ஒரே அடித்தளம்'', என்றார் அவர்.
இன்று, 2026-ஆம் ஆண்டு ஆசிய தற்காப்புச் சேவை, டி.எஸ்.எ மற்றும் ஆசியாவின் தேசிய பாதுகாப்பு கண்காட்சி, NATSEC ஆகியவற்றைத் தொடக்கி வைத்து உரையாற்றும்போது டத்தோ ஸ்ரீ அன்வார் அவ்வாறு கூறினார்.
வலுவான நிர்வகிப்பு மற்றும் சட்டப்பூர்வ உறுதித்தன்மையின் அடிப்படையில் தகுந்த மற்றும் வெளிப்படையான வணிகச் சூழலை அரசாங்கம் தொடர்ந்து வழங்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)