கோலாலம்பூர், 19 ஏப்ரல் (பெர்னாமா) -- தாமான் துன் டாக்டர் இஸ்மாயிலில் உள்ள ஜாலான் அபாங் ஹஜி ஒபெங், ஃபாசா 1B பகுதியில் தடுப்புச் சுவர் இடிந்து விழும் அளவிற்கு ஏற்பட்ட வெள்ளத்திற்கான உண்மையானக் காரணத்தைக் கண்டறிய, விரிவான தொழில்நுட்ப விசாரணையை நடத்துமாறு பொதுப்பணித் துறை ஜே.கே.ஆர்-க்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள கட்டமைப்பு உறுதித் தன்மையின் அளவை மதிப்பிட்டு, எந்தவித சமரசமும் இன்றி கூடுதல் தணிப்பு நடவடிக்கைகளைப் பரிந்துரைக்குமாறும் ஜே.கே.ஆர்-க்கு பணிக்கப்பட்டுள்ளதாக, பொதுப்பணி அமைச்சர் டத்தோ ஶ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங் தெரிவித்தார்.
சம்பவப் பகுதியைச் சுத்தம் செய்தல், ஜாலான் அபாங் ஹஜி ஒபெங் சாலையோர விளம்பரப் பலகைகளை அகற்றுதல், சுமார் 200 மீட்டர் நீளத்திற்கு கான்க்ரிட் தடுப்புகளை அமைத்தல், கட்டுமானத் தளத்தில் உள்ள அரிப்பு மற்றும் படிவு கட்டுப்பாட்டுத் திட்டம், ESCP அமைப்பைச் சுத்தம் செய்து பழுதுபார்த்தல் உள்ளிட்ட உடனடி நடவடிக்கைகள் அங்கு துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக, தமது முகநூலில் அவர் பதிவிட்டிருந்தார்.
தற்போதைய நிலைமையைச் சீராக்குவதற்கும், தொடர் அபாயங்களைக் குறைப்பதற்கும் இத்தகைய நடவடிக்கைகள் மிகவும் முக்கியமானவை என்றும் அவர் குறிப்பிட்டார்.
TTDI, ஜாலான் அபாங் ஹஜி ஒபெங்கில் உள்ள புக்கிட் கியாரா கூட்டரசு பூங்கா நிர்வாக மண்டல மேம்பாட்டின் எஞ்சிய பணிகளை நிறைவுச் செய்யும் திட்டத் தளம் - ஃபாசா 1B-க்கு அருகில் இருந்த தடுப்புச் சுவர் கனமழையால் இடிந்து விழுந்தது.
பிற்பகல் மணி 3.30 முதல் 5.30 வரை பெய்த கனமழையைத் தொடர்ந்து, இச்சம்பவம் நிகழ்ந்ததும், அதனால் திட்டப் பகுதியிலிருந்து நீர் பெருக்கெடுத்து ஓடியதும் முதற்கட்ட அறிக்கையில் தெரிய வந்ததாக நந்தா லிங்கி தெரிவித்தார்.
அதோடு, மலைப்பகுதியின் நீர் கொள்ளளவு காரணமாக மண் அணை உடைந்து நீர் பாய்ந்ததையும் அவர் விவரித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)