Ad Banner
 விளையாட்டு

இந்தியர்களின் பூப்பந்து விளையாட்டுத் திறனை மெருகேற்றும் முயற்சி

17/04/2026 06:35 PM

ஈப்போ, ஏப்ரல் 17 (பெர்னாமா) -- மலேசியாவின் பெயரை உலக அளவில் நிலைநாட்டிய டத்தோ பஞ்ச் குணாளன், மு.சுதேஷ்வரி ஆகியோரைப் போன்று பூப்பந்து விளையாட்டில் ஆர்வமுடைய இந்தியர்களுக்கு முறையான களம் அமைத்து அவர்களை கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஊக்குவித்து வருகிறது பேராக் இந்தியர் பூப்பந்து மன்றம்.

இம்மன்றத்தின் பயிற்சி மற்றும் போட்டிகளில் கலந்து கொண்ட இந்தியர்கள் பலர் மாநில மற்றும் தேசிய அளவில் இன்று  தங்களின் திறனை மெய்பித்து வருகின்றனர்.

அதன் அடிப்படையில், இவ்வாண்டும் பல புதிய சாதனையாளர்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற தொடர் முயற்சியில்,  47-ஆம் ஆண்டு தேசிய பூப்பந்து போட்டியை இம்மன்றம் ஏற்று நடத்துகிறது.

வரும் மே முதலாம் தேதி தொடங்கி மூன்றாம் தேதி வரை பேராக், பூப்பந்து விளையாட்டு அரங்கில் நடைபெறவிருக்கும் இப்போட்டியில் நாடு தழுவிய அளவிலிருந்து விளையாட்டாளர்கள் கலந்து தங்களின் திறமைகளை வெளிப்படுத்துவர் என்று மன்றத்தின் தலைவர் என்.லோகநாதன் தெரிவித்தார். 

"போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளதுடன், போட்டியாளர்களின் முழுப் பட்டியலும் சரிபார்க்கப்பட்டுள்ளது. 47 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த தேசிய போட்டி, மலேசியாவில் பல திறமையான பூப்பந்து வீரர்களை உருவாக்கிய முக்கிய தளமாக விளங்கி வருகிறது," என்றார் அவர்.
 
இப்போட்டி குறித்து, கிந்தா இந்தியர் சங்க மண்டபத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் அவர் அவ்வாறு கூறினார்.

போட்டியளவோடு மட்டும் இல்லாமல், இதில் சிறந்து விளங்கும் பூப்பந்து விளையாட்டாளர்களை தேசிய அளவில் தயார்ப்படுத்துவதற்கு போதுமான பயிற்சிகளை வழங்குவதே தமது தரப்பின் முக்கிய குறிக்கோள் என்றும் லோகநாதன் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)