சிரம்பான், ஏப்ரல் 11 (பெர்னாமா) -- போட்டித்தன்மை மற்றும் திறன்மிக்க தலைமுறையை உருவாக்கும் முயற்சிகளுக்கு இணங்க தேசிய வளர்ச்சியின் முதன்மை தூணாகத் திகழும் ஆசிரியர் தொழிலை வலுப்படுத்துவதில் அரசாங்கம் தொடர்ந்து செயலாற்றி வருகிறது.
அதனைப் பிரதிபலிக்கும் வகையில் இவ்வாண்டின் ஆசிரியர் தினக் கொண்டாட்டத்திற்கு "சிறந்த ஆசிரியர்கள்; நாட்டின் உயிர்நாடி" எனும் கருப்பொருள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
மாணவர்களை நாட்டின் எதிர்காலத் தலைவர்களாக உருவாக்குவதற்கான ஆற்றலையும் திறமைகளையும் கண்டறியும் ஆசிரியர்களின் பங்களிப்பையும் இக்கருப்பொருள் வலியுறுத்துவதாக, கல்வி துணை அமைச்சர் WONG KAH WOH தெரிவித்தார்.
"சிறந்த ஆசிரியர்கள், பரிந்துரைக்கப்பட்ட பாடத்திட்டத்தை மட்டுமே முடிப்பவர்கள் அல்ல. மாறாக, நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு கற்றல் செயல்முறையிலும் அர்த்தத்தை உருவாக்குவதில் அவர்கள் பெரும் பங்காற்றுகிறார்கள். அறிவுள்ள, உயர் திறன்கொண்ட, ஆழ்ந்து சிந்திக்கும் திறனுடைய மற்றும் உன்னதமான குணநலன்களைக் கொண்ட ஆக்கப்பூர்வ ஆசிரியர்களை அதிக எண்ணிக்கையில் உருவாக்குவதே எங்களின் முன்னுரிமையாகும்," என்றார் அவர்.
இன்று நெகிரி செம்பிலான், சிரம்பானில் தேசிய அளவிலான #terimakasihcikgu எனும் நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்து உரையாற்றும்போது அவர் அவ்வாறு கூறினார்.
2023-ஆம் ஆண்டு தொடங்கி கடந்தாண்டு வரை நாடு முழுவதும் 53,000-க்கும் மேற்பட்ட புதிய ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சு பயிற்சியளித்து பணியமர்த்தியுள்ளது.
அதேவேளையில், ஆசிரியர்களுக்கு குறிப்பாக தொடக்கப் பள்ளிகளுக்குத் தரமான ஆசிரியர்களைப் பயிற்றுவிப்பதில் ஆசிரியர் கல்விக் கழகம், ஐ.பி.ஜி தொடர்ந்து பங்காற்றி வருவதாக வோங் மேலும் குறிப்பிட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)